குடியுரிமை திருத்த மசோதா வழக்கில் பா.ஜ.க.வுக்கு வெற்றி!

slider அரசியல்

 

supreme court

 

பா.ஜ.க. அரசு பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்றியது. அடுத்து இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டார்.என்றாலும்,       குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தான் இன்று (22.1.2020) உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவிட்டுள்ளது. இது தேசிய அளவில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

எதிர்க் கட்சிகள் மற்றும் தனிநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த கடந்த மாதம் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு முன விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மத்திய அரசு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் அப்போது வைக்கப்பட்ட கோரிக்கையான குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கலான மொத்தம் 144 மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றத்தில் இன்று (22.1.2020) மீண்டும் விசாரணை நடைபெற்றது.  இதனை அதே தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வே விசாரணை நடத்தியது. இந்தமுறையும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதுவும்  தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை தொடங்குவதற்கு முன்பாக, இந்த வழக்கில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை வைத்தார்.

வழக்கறிஞர் கபில்சிபிலின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு மட்டுமில்லாமல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப் போவதில்லை என்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் அனைத்தும், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும் தலைமை நீதிபதி பாப்டே அறிவித்துள்ளார்.

பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கும் என்று அதிகம் நம்பியிருந்தனர். ஆனால், நேர்மாறாக இடைக்காலத் தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் விட்டது. ஒருவகையில் இந்த தீர்ப்பு என்பது பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றியாக தேசிய அளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்