காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய ஆசைப்படும் டொனால்ட் டிரம்ப்!

slider அரசியல் உலகம்

 

 

மத்திய அரசு ஐம்மு- காஷ்மீரை இரண்டாகப் பிரித்து மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஜம்மு – காஷ்மீர் பிரிப்பை எதிர்த்து ஐ.நா உட்பட பல நாடுகளிடமும் முறையிட்டு வருகிறது பாகிஸ்தான். இதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். காஷ்மீர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அடிக்கடி தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இப்போதும் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கவும் தானும் சமரசம் செய்ய தயாராகவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை 21.1.2020 அன்று சந்தித்துப் பேசினர்.  இந்தப் பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவு, வர்த்தகம் மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம்  பேசியபோது அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப்,  ’’காஷ்மீர் பிரச்சினை  குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் விவாதித்தேன். நாங்கள் உதவ முடிந்தால், நிச்சயமாக உதவுவோம். இந்த பிரச்சினையை  நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு சுமூகமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.  வாய்ப்பு கிடைத்தால் இருநாடுகள் இடையே சமரசம் செய்ய ஆவலாக உள்ளேன்’’ என்று கூறினார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க.  அரசு, காஷ்மீர் விவகாரத்தில் பிரச்னைக்கு தீர்வு காண மூன்றாவது  நபரின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் இப்போதும் உறுதியாக இருக்கிறது.  ஆனால், நான்காவது முறையாக, இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது விருப்பத்தை இப்போதும் தெரிவித்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. அனேகமாக, மத்திய அரசு தரப்பில் இன்னும் சில நாளில் இது குறித்து தக்க பதில் வெளியாகவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

  • நிமலன்