மோகன் ராஜா இயக்கத்தில் தேசிய விருது படத்தில் பிரசாந்த்!

slider சினிமா
prasanth

 

பாலிவுட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் ‘அந்தாதுன்’. ஆயுஷ்மன் குரானா, தபு உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. ‘தி பியானோ டியூனர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவலாக உருவான இந்த படம், வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த திரைக்கதை உள்ளிட்ட மூன்று தேசிய விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி, இதர மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய போட்டியை ஏற்படுத்தியது. அந்த வகையில், தமிழில் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்ற தனுஷ், சித்தார்த், பிரசாந்த் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியில் நடிகர் பிரசாந்த் அதிக விலை கொடுத்து இந்த உரிமையைக் கைப்பற்றினார்.

தமிழில் ரீமேக் ஆக உருவாகவுள்ள ‘அந்தாதுன்’    படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்க உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆயுஷ்மன் குரானா வேடத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார்.  இயக்குநர் மோகன் ராஜாவை பொறுத்தவரை ரீமேக் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர். இவர் தமிழில் இயக்கிய பல ரீமேக் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாகவே ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கினால் சரியாக இருக்கும் என பிரசாந்த் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.