முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கும் பிரேமலதா விஜயகாந்த்!

slider அரசியல்

 

premalatha-vijayakanth

 

ஆளும் கட்சியாகவுள்ள   அ.தி.மு.க.வில் முக்கிய கூட்டணி கட்சிகளாக விளங்கி வருபவை பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகள். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தல் உள்பட சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற வெற்றிக்கு இந்த இரண்டு கட்சிகளின் பங்கு பிரதானமானது. ஏற்கெனவே பா.ம.க.வில் அன்புமணிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை அ.தி.மு.க. தந்துள்ளது. இந்நிலையில் இப்போது தே.மு.தி.க.வில் சுதீஷுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்டு கேட்டு அழுத்தம் கொடுப்பதால், அ.தி.மு.க.வுக்கு இது மிகப்பெரிய  நெருக்கடியாக அமையலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் கிளம்பியுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதத்தோடு முடிவடையவுள்ளது. இதற்காக இப்போதே புதிய உறுப்பினர்கள் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் ஆலோசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த முறை பா.ம.க.வுக்கு ஒரு சீட் வழங்கியது போல், இந்தமுறை தங்களுக்கு ஒரு சீட் கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வை தே.மு.தி.க. தலைமை  நெருக்கி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, அ.தி.மு.க.வில் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், சசிகலா புஷ்பா, ஆகியோரின் பதவிக் காலங்கள் முடிகின்றன. இதேபோல், தி.மு.க.வில் திருச்சி சிவாவின் பதவிக் காலமும், மார்க்சிஸ்ட் கட்சியில் டிகே ரங்கராஜன் பதவிக் காலமும் முடிவடைகிறது. தற்போதைய சட்டமன்ற பலத்தின் நிலவரப்படி தி.மு.க.வுக்கு மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் வரை தேர்வு செய்யப்படலாம். அதேபோல் அ.தி.மு.க.விலும் மூன்று ராஜ்யசபா உறுப்பினர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட முடியும். சட்டமன்ற பலத்தை வைத்து பார்க்கும்போது இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சரிபாதியாக உள்ளன.

சட்டமன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் மூலம் அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைக்க பெரும் காரணமாக இருந்ததும், அ.தி.மு.க.வின் இன்றைய செல்வாக்குக்கு தே.மு.தி.க.வின் பங்கு இன்றியமையாதது என்றும், இனி வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி,  அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை எப்படியாவது பெற்றுவிட பிரேமலதா விஜயகாந்த், அ.தி.மு.க. இரட்டை தலைமையை நெருக்கி வருவது உண்மைதான் என்றும், ஆனால் இது வெற்றியில் முடியுமா அல்லது தோல்வியில் முடியுமா என்று தற்போதைக்கு சொல்ல முடியாது என்கிற கருத்து தமிழக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பிரதானமாக அலசலாகி வருகிறது.

தொ.ரா.ஸ்ரீ.