பேரறிவாளன் விடுதலை பற்றி உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு!

slider அரசியல்

 

பேரறிவாளன்

 

 

ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக  சிறைத் தண்டனை அனுபவித்துவரும் எழுவரில் பேரறிவாளனும் ஒருவர். தமிழக அரசு இந்த எழுவர்களையும் விடுதலை செய்ய எவ்வளவோ முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும், ஏதோ ஒரு கட்டத்தில் மத்திய அரசால் முட்டுக்கட்டை விழுந்து இவர்கள் விடுதலை தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. தற்போது இந்த விவகாரத்தில் பேரறிவாளனை விடுதலை செய்வதில் தாமதம் ஏன்? என்று இரண்டு வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இதில் தான்  பேரறிவாளன், முருகன், சாந்தனு, நளினி உட்பட எழுவரும் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இதில் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தன் மீதான் குற்றச்சாட்டு குறித்து ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், ’’ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்த பெல்ட் வெடிகுண்டுக்கான பேட்டரியை வாங்கிக் கொடுத்த குற்றச்சாட்டில் தான் நான் சிறைவாசம் அனுபவிக்கிறேன். ஆனால், பெல்ட் வெடிகுண்டு எங்கு யாரால் தயாரிக்கப்பட்டது என்கிற விவரத்தை சி.பி.ஐ. தமக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சி.பி.ஐ. மீண்டும் மீண்டும் ஒரே பதிலை அளித்ததால் உச்சநீதிமன்றம் அதிருப்தியை சமீபத்தில் வெளியிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் புதிய பதில் மனுவை தாக்கல் செய்தது சி.பி.ஐ. அதில், பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய தகவல்களை திரட்ட முடியவில்லை. பெல்ட் வெடிகுண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என மனுதாரர் கூறுகிறார். வெளிநாடுகளில் விசாரிக்க பல வழிமுறைகள் உள்ளன என தெரிவித்தது.

சி.பி.ஐ.யின்  இந்த பதிலில் திருப்தி கொள்ளாத உச்சநீதிமன்றம், “மனுதாரர் பேரறிவாளனை விடுதலை செய்வதில் தாமதம் ஏன்?” என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், பேரறிவாளனை விடுதலை செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த எழுவர் விடுதலை என்பது பிரதான விஷயமாக பல தேர்தல்களில் பிரதிபலித்து வருகிறது. அதனால் முக்கிய கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இவர்கள் விடுதலையில் ரொம்பவே கரிசனம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இப்படி உத்தரவிட்டுள்ளது. அனேகமாக, உச்சநீதிமன்றத்தின் இந்த கேள்வியும், உத்தரவும் இந்த எழுவர் விடுதலை விஷயத்தில் புதிய விடியலை உருவாக்கலாம் என்கிற பார்வையை முன்வைக்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.

  • விசாகன்