பெரியார் குறித்த விமர்சனத்துக்கு ரஜினியின் அதிரடி பதில்!

slider அரசியல்

 

துக்ளக் விழாவில் ரஜினி

 

கடந்த 14ம் தேதி நடைபெற்ற  ‘துக்ளக்’ பத்திரிகையின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் தமிழ் சினிமா பிரபலம் ரஜினிகாந்த் பேசிய பெரியார் குறித்த கருத்துக்கு திராவிட அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. இது இப்போது வரையிலும் தொடர்ந்து ரஜினிகாந்துக்கு பெரிய நெருக்கடி கொடுக்கும் ஒன்றாக உருவாகியுள்ளது. பெரியார் பற்றி ரஜினி பேசியதுக்கு அவர் மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்திருக்கும் அமைப்புகள் கூறிவரும் நிலையில், தற்போது பெரியார் குறித்து தான் சொல்லிய கருத்துக்கு மன்னிப்பு கேடகப் போவதில்லை என்று ரஜினி அதிரடியாக சொல்லியிருப்பது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘துக்ளக்’ இதழின் 50-ம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி பெரியார் மற்றும்  ‘முரசொலி’ நாளிதழ் குறித்து பேசினார்.  அங்கே ரஜினி பேசும்போது, “சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும். பத்திரிகை துறை தற்போது சரியாக இல்லை.  ‘முரசொலி’ வைத்திருந்தால் அவரை தி.மு.க.காரர் என்று சொல்லிவிடலாம். கையில்  ‘துக்ளக்’ வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம்” என்று பேசியிருந்தார்.

மேலும், “பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக் கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததைப் பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால், சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார். இதனால்   ‘துக்ளக்’ பத்திரிகை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது” என்றும் ரஜினி அந்த விழாவில் பேசியிருந்தார்.

 

பெரியார் குறித்த இந்த பேச்சு ரஜினியிடமிருந்து வந்தது தொடங்கி ரஜினிக்கு எதிராகவும், அவர் பெரியார் குறித்து பேசியதற்கு எதிராகவும் இணையத்தில் பலரும் விமர்சனம் வைத்து வருகிறார்கள்.  குறிப்பாக, இணையத்தில் இதனால் ரஜினி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். மேலும், அரசியல் அமைப்புகளான திராவிட விடுதலை கழகம், பெரியார் திராவிட கழகம் உட்படசில அமைப்புகள் ரஜினி மீது காவல்துறையில் புகாரும் அளித்துள்ளன.

இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் விளக்கம் அளித்து பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் ரஜினி, “துக்ளக் விழாவில் நான் பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாகி வருகிறது. பெரியார் பற்றி நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சாரி. பெரியார் குறித்த கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. பெரியார் குறித்து நான் பேசியது தவறானது கிடையாது. நான் சொன்னது உண்மை. நான் இல்லாததை சொல்லவில்லை. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. நான் கேள்விப்பட்டதை, படித்ததைதான் நான் சொல்கிறேன். 2017-ம் ஆண்டில்  ‘அவுட்லுக்’ பத்திரிக்கையில் வந்ததைதான் நான் பேசினேன். 1971-ம் ஆண்டில் நடந்த பெரியார் பேரணி குறித்து நான் கற்பனையாக பேசவில்லை. ராமர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தது உண்மைதான். நான் சொன்னது தவறு கிடையாது. தெளிவாக அதை நான் விளக்கிவிட்டேன்.  நான் பார்த்ததை நான் சொல்கிறேன். அவர்களை பார்த்ததை அவர்கள் சொல்கிறார்கள். இதை இனியும் பெரிதுபடுத்தக் கூடாது. இதை மறுக்க வேண்டிய சம்பவம் கிடையாது. மறக்க வேண்டிய சம்பவம்’’ என்று ரஜினிகாந்த் தனது பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் ரஜினியின் இந்தப் பேட்டிக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் பலர் மோதிக்கொள்வதும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஜினி தனது அரசியல் பிரவேசத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்துவிட்டதாகவே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ரஜினியின் இந்த அதிரடி பதிலுக்கு நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பதும் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்