சுமூகமாக முடிந்த சாய்பாபா விவகாரம்!

slider அரசியல்
saibaba

 

கடந்த சில நாள்களாக இந்தியாவெங்கும் பெரியளவில் பரபரப்பான செய்திகளில் ஒன்று “ஷீரடி சாய்பாபா எங்கு பிறந்தார்? என்பது. இது மகாராஷ்டிராவை பொறுத்தவரை அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது. இதற்காக கடையடைப்பு வரை சென்றுள்ளது இதன் தீவிரம் எந்தளவு என்பதை அறிய வைக்கிறது. தற்போது இந்த விவகாரத்தை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே சுமூகமாக முடித்து வைத்துள்ளதால், இதுபற்றிய பரபரப்பு அடங்கியுள்ளதாக மகாராஷ்டிராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விபரமாக பார்ப்போம் :

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி நடந்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற  அமைச்சரவையின் முடிவின்படி, சாய்பாபாவின் பிறப்பிடமான பர்பானி மாவட்டத்திலுள்ள பத்ரி ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்தப்படும் என்றும், அதற்காக 100 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.  இது சாய்பாபா பிறப்பிடம் பத்ரி என்று முதல்வர் ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களில் வெளியானது.

இதனைத் தொடர்ந்து சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்த சர்ச்சை வெடித்தது. பத்ரி கிராம மக்கள் சாய்பாபா தங்கள் ஊரில் தான் பிறந்தார் என்று கூறி வருகின்றனர். அதனை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஷீரடிதான் சாய்பாபாவின் பிறப்பிடம் என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.  பத்ரியை சாய்பாபாவின் பிறப்பிடம் என அறிவித்து மேம்படுத்தினால், ஷீரடியின் மகத்துவம் குறைந்து விடும் என்று கருதி, அங்குள்ள வியாபாரிகளும், உள்ளூர் மக்களும் நேற்று முன்தினம் (19.1.2020)  முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. இந்த போராட்டத்துக்கு ஷீரடி பகுதி சிவசேனா எம்.பி. சதாசிவ் லோகண்டேவும் ஆதரவு தெரிவித்தார்.

இதற்கு மத்தியில் பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஷீரடி மக்களுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்தார். அதன்பேரில் நேற்று (20.1.2020) மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஷீரடி கோவில் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், துணை முதலமைச்சர் அஜித்பவார், சிவசேனா எம்.பி. சதாசிவ் லோகண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டம் முடிந்த பின்னர் சதாசிவ் லோகண்டே எம்.பி. பேசுகையில், “முதமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. சாய்பாபா பிறப்பிடம் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. சாய்பாபாவின் பிறப்பிடம் பாத்ரி (பத்ரி) என்று கூறியதை முதலமைச்சர் திரும்ப பெற்றுக்கொண்டார். பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களும் சாய்பாபாவின் பிறப்பிடம் பாத்ரி என்று கூறுவதில் தான் தங்களுக்கு பிரச்சினை, அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டனர்’’ என்று கூறினார்.

அதேநேரத்தில் பாத்ரி சாய்பாபாவின் பிறப்பிடம் இல்லை என்று முதலமைச்சரோ அல்லது அவரது அலுவலகம் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகாத நிலையே இருந்து வருகிறது. முன்னதாக முதலமைச்சருடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாவிட்டால் தீவிர போராட்டம் நடத்துவோம் என்று ஷீரடி மக்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூட்டிய கூட்டம் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக தீர்வு கிடைத்திருக்கிறது. இதுவே  உலகமெங்கும் சாய்பாபா பக்தர்களுக்கு பெரிய திருப்தியையும், நிம்மதியையும் அளித்திருக்கிறது. மேற்கொண்டும் இந்த பிரச்னை மோதலாக ஆகாமல் சுமூகமாக முடியவேண்டும் என்றே சாய்பாபா பக்தர்கள் வேண்டுவர் என்பது மட்டும் உறுதி.

 

நிமலன்