கெஜ்ரிவாலை தோற்கடிக்க பா.ஜ.க., காங்கிரஸ் புது வியூகம்!

slider அரசியல்
arvind kejriwal

 

டெல்லி யூனியன் சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டெல்லியில் தொடர்ந்து இரண்டு முறை ஆத்மி கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது முதல்வராக கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியைத் தொடர்ந்தாலும் டெல்லி யூனியனில் தங்கள் ஆட்சி இல்லாததை பெரும் கௌரவ இழப்பாக பா.ஜ.க.வின்  தேசிய தலைமை கருதி வருகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸும் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக செயல்பட துவங்கியுள்ளது. இந்நிலையில் முதல்வர் கெஜ்ரிவாலை தோற்கடிக்க பா.ஜ.க.வும் காங்கிரஸும் இளைஞரணி தலைவர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.

இரண்டு முறை முதல்வராகவுள்ள கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கே கெஜ்ரிவாலை எதிர்த்து மாணவர் மற்றும் இளைஞர் அணி தலைவர்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. களமிறக்கியுள்ளன. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறுகிறது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.  இந்த மூன்று கட்சிகளிலுமே சீட் கிடைக்காதவர்கள் ஆதரவாளர்களுடன் கட்சி தலைமையுடன் மல்லுக்கட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, புதுடெல்லி தொகுதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜ.க.வின் வேட்பாளராக டெல்லி பா.ஜ.க.வின் இளைஞரணி தலைவர் சுனில் யாதவ் களம் காணுகிறார். வழக்கறிஞரான சுனில் யாதவ், பா.ஜ.க. மாவட்ட தலைவராகவும் இளைஞரணியின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்தவர். இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வாலும் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடுகிறார்.   இதன்மூலம் இளைஞர்களின் நம்பிக்கையை பெற்ற கெஜ்ரிவாலை தோற்கடிக்க பா.ஜ.க.வும், காங்கிரஸும் திட்டம் போட்டுள்ளது தெரிய வருகிறது என்கிறது டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்கள்.

 

குருபரன்