ஹைட்ரோ கார்பன் திட்டம் – துவங்கப்போகின்றன புதியவகை போராட்டங்கள்!

slider அரசியல்

 

Hydrocarbon-Production

தமிழகத்தின் முக்கிய நெற்களஞ்சிய பகுதிகளான டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக வயல் நிலங்களை கையகப்படுத்த எடுத்த முயற்சிகளின்போதே மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தினர். குறிப்பாக, புதுகோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் கிராமத்தில் 100 நாள்கள் மேல் நடைபெற்ற எதிர்ப்பு போராட்டம் உலகளவிலான கவனத்தை ஈர்த்தது. இந்த மக்கள் போராட்டங்களினால் மத்திய அரசும், தமிழக அரசும் மேற்கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்தனர் .இந்நிலையில் மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிர களம் இறங்கியுள்ளாதால் தமிழக டெல்டா மற்றும் புதுகோட்டை பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை வேளாண் மண்டலங்களாக குறிப்பிடுவர். இது காலங்காலமாக விவசாய பூமியாக இருந்து வருகிறது. இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவருவதன் மூலம் விவசாய நிலங்கள் யாவும் பயிரிடுவதற்கு பயன்படாத தரிசு நிலங்களாக ஆகிவிடும் என்றே இந்தப் பகுதி பொது மக்களும், அரசியல் கட்சியினரும் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு இந்த திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அதுமட்டுமன்றி மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையால் டெல்டாவின் முக்கிய பகுதியான தஞ்சை பகுதியிலுள்ள விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பெரிய திட்டம் ஓரிடத்தில் செயல்படுத்தும்போது அந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியும், மக்களின் கருத்து கேட்கும் கூட்டமும் மிக அவசியம் என்ற நிலையில் இப்படி ஒரு அவசர அரசாணையை மத்திய அரசு பிறப்பித்தது ஏன்? என தஞ்சை பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆகவே, இந்த அரசாணை மூலமாக மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் புதிய வகைகளில் வெடிக்கும் எனவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது.

இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு என்னமாதிரியான அணுகுமுறையை கையாளப் போகிறது? என்கிற பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக அலசப்படுகிறது.

 

விசாகன்