வரும் மார்ச் மாதத்தில் மாநகராட்சி, நகராட்சி தேர்தல்!

slider அரசியல்
tec

 

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்து, அதற்கான முடிவுகளும் வெளியாகிவிட்ட நிலையில், இன்னும் நகர்புறங்களுக்கும், மாநகராட்சிக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரகத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் தற்போது   நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பை மார்ச் மாதத்தில்  வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு உருவாக்கியது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில்  இட ஒதுக்கீடு அடிப்படையில் புதிய கணக்கெடுப்பை காரணம் காட்டி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  மேலும், இந்த மாவட்டங்களில், வார்டு மறுவரையறை பணிகளை முறையாக செய்து, மூன்று மாதங்களில் தேர்தல் நடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் 27 மாவட்டங்களிலுள்ள 91 ஆயிரத்து, 975 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே கடந்த மாதம் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. சென்னை மற்றும் இதர மாநகராட்சி மற்றும் நகராட்களில் ஊரக உள்ளாட்சி பதவிகள் இல்லாததால், தேர்தல் நடக்கவில்லை. ஆகவே, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலுடன், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் உள்ள, ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டியிருக்கிறது. ‘நிர்வாக காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளளாட்சி தேர்தலை அறிவிக்கவில்லை’ என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறி வந்தார்.

தற்போது நகர்ப்புற தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும் 27 மாவட்டங்களில் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகளும் இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டு பிரிக்கும் பணிகளும் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான பணிகளை மாநில வார்டு வரையறை ஆணையம் துவங்கி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களுக்கும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. விரைவில், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வார்டு வரையறை தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவிருக்கிறதாம்.  இதில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்ட வார்டுகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட உள்ளதாம். இப்பணிகளை முடிக்க, பிப்ரவரி மாதம் வரை அவகாசம் தேவைப்படுமாம்.

எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வகைபட்ட நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தலுடன் ஒன்பது மாவட்டங்களின் ஊரக தேர்தலையும் சேர்த்து நடத்த மாநில ஆணையம் முடிவெடுத்து உள்ளதாம்.  இதற்கான தேர்தல் அறிவிப்பை மார்ச்சில் வெளியிட்டு, ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம். இதற்கான பணிகளை நேரில் பார்வையிடவும், வேலைகளை வேகப்படுத்தவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, செயலர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்யவும் திட்டமிட்டு உள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையகம் தங்கள் செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

  நிமலன்