தமிழக புதிய பா.ஜ.க. தலைவர் அறிவிப்பு தள்ளிபோனது ஏன்?

slider அரசியல்
bjb leader jpnadda

 

தமிழக பா.ஜ.க. தலைவராக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி என்பது நிரப்பப்படாமலே இருந்து வருகிறது. சமீபத்தில் தமிழகத்தின் பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்கும் பணியை தேசிய தலைமை கையிலெடுத்து வேகம் காட்டியது. இதனால், பொங்கலுக்குப் பிறகு புதிய தலைவர் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் வழக்கம்போல மீண்டும் இந்தப் பதவிப் பிரமாணம் தள்ளிபோயுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வின் புதிய தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனதற்கு, அக் கட்சிக்குள் நிலவும் உட்கட்சி மோதலே காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜ.க.வின் புதிய தலைவர்  போட்டியில் எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி. ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன், குப்புராமு ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.  இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த பத்து நாளில் இரண்டுமுறை நடந்து முடிந்துள்ளது. தமிழக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். தேசிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜே.பி நட்டாவும் கான்பிரன்ஸ் கால் மூலம் இந்தக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். முதல்கூட்ட பேச்சுவார்த்தை 4 மணி நேரம் தாண்டி நடந்திருக்கிறது. இந்த ஆலோசனையில் வட இந்திய தலைவர்கள் சிலரை தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே. பி. நட்டா தமிழக தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளார். அதாவது உத்தர பிரதேசம், பீகார்  நடைமுறை அரசியலை இங்கே கொண்டு வர அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

ஆனால்,  இதற்கு சில தமிழக பா.ஜ.க. தலைகள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக பா.ஜ.க.விற்காக உழைத்த நபர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும். வெளி ஆட்கள் வரக்கூடாது என்று  கூறியுள்ளனர். இதனால் தேசிய தலைமை மேற்கொண்டு எதுவும் செய்யாமல் மௌனமாகிவிட்டது.

அதேநேரத்தில் தமிழக பா.ஜ.க.விற்கு உள்ளேயும் நிறைய உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. குறிப்பாக, பா.ஜ.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் எல்லோரும் தனித்தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் ஒருவரை தலைவராக தேர்வு செய்தால் இன்னொரு கோஷ்டி கோபம் அடையும். இதுவும் தலைவரை தேர்வு செய்வதில் பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தாண்டு வாக்கில் தமிழக சட்டமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடக்கவுள்ளது. அனேகமாக, இப்போதுள்ள அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தே பா.ஜ.க தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், கூட்டணி சம்பந்தமாகவும், தொகுதி பங்கீடு குறித்தும் தகுந்த ஒரு நபரை தலைவராக தேர்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக பா.ஜ.க. ஆனால், வட இந்திய தலைவரை தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவராக்கலாமா? அல்லது இங்குள்ள ஆறு, ஏழு பேரில் யாரை தலைவராக்கலாம் என்கிற ஆலோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி தமிழகத்திற்கான பா.ஜ.க தலைவர் விஷயத்தில் ஏற்படும் காலதாமதம் சட்டமன்றத் தேர்தலில் சுணக்கம் ஏற்படுத்தும் ஒன்றாகவும் அமையலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்