குஜராத்தில் பிரியங்கா காந்தியை களமிறக்கும் காங்கிரஸ்!

slider அரசியல்

 

 

pk-hp

குஜராத்தில் இப்போது பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜய் ரூபானி முதலைமைச்சராக இருந்து வருகிறார். இந்த மாநிலத்தில் படேல் சமூகத்துக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராட்டங்கள் நடத்தி பிரபலமானவர் ஹர்திக் படேல். இன்றைக்கும் இவர் படேல் சமூக மத்தியில் செல்வாக்காக இருந்து வருகிறார். இவரது அரசியல் வருகை மாநில அளவில் பா.ஜ.க.வுக்கு பின்னடைவாகவும், காங்கிரஸுக்கு சாதகமாகவும் மதிப்பீடு செய்யப்படும் சூழலே தற்போதைக்கு அங்கே இருந்து வருகிறது. இந்நிலையில் ஹர்திக் படேலை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியிருப்பது குஜராத்திலும், தேசிய அளவிலும் பெரும் விவாதமாகியுள்ளது.

குஜராத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற படேல் சமூகத்தினர் பேரணியில் கலவரம் ஏற்பட்டது. பேரணிக்கு தலைமை வகித்த ஹர்திக் படேல் மீது தேச துரோக வழக்கு குஜராத்தின் பா.ஜ.க. அரசாலும், மத்தியிலிருந்த பா.ஜ.க. அரசாலும் போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.   இந்த வழக்கில் தற்போது ஹர்திக் படேல் ஆஜராகத் தவறியதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் (18.1.2020) அவரை குஜராத் போலீஸார் கைது செய்தனர்.

ஹர்திக் படேலை குஜராத் அரசு திடீரென்று இப்படி கைது செய்ததற்கு  காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில், “விவசாயிகளின் உரிமைக்காகவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் போராடி வரும் ஹர்திக் படேலை பா.ஜ.க. தொடர்ந்து துன்புறுத்தி சீண்டி வருகிறது. ஹர்திக் படேல் செய்வதையெல்லாம் தேசத் துரோகம் என பா.ஜ. கூறுகிறது’’ என்றுகூறி பா.ஜ.க.வுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

பிரியங்கா காந்தியின் இந்த டுவிட்டர் கருத்து குறித்து பா.ஜ.க. தலைவரும், குஜராத் துணை முதல்வருமான நிதின் படேல் கூறுகையில், “பிரியங்காவுக்கு சட்ட புரிதல் வேண்டும். வழக்கு விசாரணையில் ஆஜராகாத ஹர்திக்கை, கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது சட்ட நடவடிக்கை. இதில் மாநில அரசு, போலீஸாரின் பங்கு எதுவுமில்லை’’ என்று கூறியுள்ளார்.

குஜராத்தில் அடுத்து நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலை முக்கிய குறியாக வைத்து காங்கிரஸின் தேசிய தலைமை செயல்படுவதும், அதற்கு உத்தரபிரதேசத்துக்கு அடுத்ததாக பிரியங்கா காந்திக்கு அந்த பொறுப்பை காங்கிரஸின் தேசிய தலைமை கொடுத்திருப்பதும் பிரியங்கா காந்தி ஹர்திக் படேலுக்காக குரல் கொடுப்பதன் மூலம் தெளிவாக தெரியவருகிறது என்பதாக டெல்லி அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தொ.ரா.ஸ்ரீ.