ஓ.பி.ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சராக்க விரும்பும் பா.ஜ.க.!

slider அரசியல்

 

தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவுள்ள அ.தி.மு.க.வுக்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டது. இந்தப் படுதோல்விக்கு நடுவில் தேனி பாராளுமன்றத்தில் மட்டும் அ.தி.மு.க.வுக்கு ஒரே ஒரு வெற்றி கிடைத்தது. இங்கே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் எம்.பி.யாக தேர்வானதிலிருந்தே மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசில் மத்திய அமைச்சராகிவிட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் மத்திய அமைச்சரவை விஸ்தரிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதமாகியுள்ளது.

தேனி பாராளுமன்றத் தொகுதியும் எம்.பி.யும், துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்திரநாத்துக்கு டெல்லி பா.ஜ.க. தலைமையுடன் நல்ல நெருக்கம் இருந்தாலும், இங்கே அ.தி.மு.க.வுக்குள்ளே மத்திய அமைச்சர் பதவி பெறுவதில் போட்டியாளராக முன்னாள் தமிழக அமைச்சரும், இப்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைத்தியலிங்கம் இருந்து வருகிறார். இதனால் ஆரம்பத்தில் தயங்கிவந்த டெல்லி பா.ஜ.க. தலைமை இப்போது அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சர் பதவி தரும்பட்சத்தில், அதை ஓ.பி. ரவிந்திரநாத்துக்கு தர முடிவு செய்துவிட்டதாக சமீபத்திய டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியும் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பில் மத்திய அமைச்சராகிவிட வேண்டும் என்பதில் ரவீந்திரநாத் ரொம்பவே விருப்பமாகவுள்ளார். மேலும், இதற்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள தனது குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தியதுடன்  அந்தக் கோவிலில் மனம் உருகி  வேண்டுதலும் முடித்துள்ளார் என்கிறார்கள் தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள்.

மத்தியிலுள்ள பா.ஜ.க.வும் தமிழகத்தில் எப்படியும் தங்கள் கட்சியை செல்வாக்கு கொண்ட கட்சியாக கொண்டுவர பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க.வுடன் இணைந்தே சந்திக்க வேண்டிய நெருக்கடியும் அந்தக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்படியான நிலையில் அ.தி.மு.க.வுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்து, அந்தக் கட்சியை தங்களுடன் நெருக்கமான வைத்துக்கொள்ள ஓ.பி.நவீந்திரநாத்துக்கு அமைச்சர பதவி கொடுக்க அதிக வாய்ப்பிருப்பதாகவே தமிழக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 – தொ.ரா.ஸ்ரீ.