இலங்கை தமிழர் விஷயத்துக்குள் இழுக்கப்படும் ரஜினி!

slider அரசியல் உலகம்

 

 

சில தினங்களுக்கு முன்பு இலங்கை தமிழ் அரசு கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னையில் போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஜினியின் அரசியல் திட்டங்கள் குறித்து விக்னேஷ்வரன் கேட்டறிந்தார். மேலும், இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள், தமிழர்கள் பிரச்னை, திரைப்பயணம் குறித்தும் பேசினார்கள். அதேபோல் இலங்கை வருமாறும், அங்கிருக்கும் தமிழ் மக்களை சந்திக்குமாறும். அரசியல் ரீதியான கூட்டங்களில் அங்கு கலந்து கொள்ள வேண்டும் என்றும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பும் விடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு நாள் ஒதுக்கியபோது, அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியானது. இந்த செய்தி தமிழகத்திலும், இலங்கையிலுள்ள தமிழர்கள் மத்தியிலும் விவாதமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ரஜினிக்கு இலங்கை விசா மறுத்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் இலங்கை அரசு தரப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ரஜினி நடித்த  ‘தர்பார்’ படம் அண்மையில் வெளியாகியிருக்கிறது. இதற்கு அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கும் வேலையில் ரஜினி இறங்கியுள்ளார். இதற்கு மத்தியில்  ரஜினியை வைத்து தமிழகத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு விஷயங்கள் நடந்து வருவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதில் இப்போது இலங்கை தமிழர்கள் விஷயமும் புதிதாக சேர்ந்திருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்கிற கேள்விக்கே இன்னும் அவரிடமிருந்து தெள்ளத் தெளிவான பதில்கள் கிடைக்காமல் இருந்துவரும் நிலையே நீடிக்கும் இத் தருணத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழக அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிற இலங்கை தமிழர் விஷயமும் சேர்ந்திருப்பது ரஜினியை அரசியலுடன் இணைக்கும் பேச்சுக்களும், விவாதங்களும் இன்னும் அதிகரிக்குமே ஒழிய குறைய கொஞ்சமும் வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்