சபரிமலையில் பெண்கள் வழிபாடு!- உச்சநீதிமன்றம் வித்தியாசமான முடிவு!

slider அரசியல்

 

சபரிமலை

 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக கேரளாவில் பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் பெரும் போராட்டத்தை நடத்தின. தற்போது சபரிமலை கோவில் நிர்வாகம் ஐயப்பனை தரிசிக்க வரும் ஐம்பது வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு எங்களால் அளிக்க முடியாது என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் வழிபடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்துள்ளது.

கேரளாவில் பிரசித்த பெற்ற சபரிமலை உள்ளது. இங்குள்ள ஐயப்பனுக்கு தமிழகம் உட்பட தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து பக்தியுடன் சென்று தரிசித்து வருகின்றனர். இதில் கடந்த வருடம் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்து தீர்ப்பு வழங்கியது. இது இந்த கோவிலின் ஆகம விதிமுறைகளுக்கு எதிரானது என்றுச் சொல்லி பெரியளவில் கேரளாவில் போராட்டங்கள் வெடித்தது.

உடனடியாக, உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து 56 மேல்முறையீட்டு மனுக்கள் உள்ளிட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.  இந்த விசாரணையை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக கடந்த நவம்பர் 14-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. அதேநேரம் 2018ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதிப்பது குறித்து எந்த உத்தரவும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் சபரிமலை தொடர்பான வழக்குகளை தற்போதைய தலைமை நீதிபதி எஸ் .ஏ. பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, அஷோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், மோகன் எம்.சந்தான கவுடர், எஸ் அப்துல் நசீர், ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் இடம் பெற்றனர்.   பழைய வழக்கில் இருந்து ஆர்.எப் நாரிமன், டி.ஒய். சந்திராசூட், இந்து மல்ஹேத்ரா ஆகியோர் 9 நீதிபதிகள் அமர்வில் இடம் பெறவில்லை.

சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (13.1.2020) விசாரிக்க உள்ளதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று (13.1.2020) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, “சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை. அத்துடன் சபரிமலை விவகாரத்தில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகளைத் தான் விசாரிக்க இருக்கின்றோம். கோவில், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்வது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா என்பதை கேட்க இருக்கிறோம்.

இது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான விஷயம் மட்டும் அல்ல. அனைத்து மதத்திலும் இருக்க கூடிய விஷயங்களையும் விசாரிக்க இருக்கிறோம். 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு எழுப்பிய கேள்விகளை மட்டுமே விசாரிப்போம். இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து அனைத்து தரப்பும் பதில் அளிக்க 3 வாரங்கள் அவகாசம் அளிக்கிறோம்’’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்தார். இதனிடையே இந்த வழக்கில் தன்னை நேரடியாக வாதிட அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சபரிமலை தலைமை தந்திரி கோரிக்கை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொ.ரா.ஸ்ரீ.