உள்ளாட்சித் தேர்தல் – மீண்டும் நீதிமன்றத்தில் தி.மு.க. முறையீடு

slider அரசியல்

!

stalin-eps

 

 

தமிழகத்தில் சமீபத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகளில் அ.தி.மு.க.வைவிட தி.மு.க. சற்றே அதிகமாக வெற்றிகள் பெற்றிருந்தது. இந்த முடிவுகளின்படி சில நாட்களாக நடைபெற்றுவரும் மறைமுக ஒன்றிய சேர்மன் தேர்தல்களில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டு தங்களுக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை தட்டிப் பறிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளது தி.மு.க. மேலும், இப்படி முறைகேடு மூலம் பெற்ற வெற்றிகள் செல்லாது என்று அறிவிக்கக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் தி.மு.க. அதிகமான ஒன்றிய கவுன்சிலர்களை வைத்துள்ள இடங்களிலும் யூனியன் சேர்மன் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றிவிட்ட சம்பவங்கள் தொடர்ந்து வந்தது. சில இடங்களில் இதற்காக அடிதடி, கலவரம் வரை ஏற்பட்டுள்ளது. இந்த மறைமுக தேர்தல் ஆரம்பித்த அன்றிலிருந்தே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க. அரசு அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல் வெற்றிகளை அறிவித்து வருகிறது என்றும், இதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகிறார்கள் என்றும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் தி.மு.க. வெற்றிபெறும் நிலையில் இருந்த கடலூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல்  நிறுத்தப்பட்டதை எதிர்த்து தி.மு.க. தரப்பில் ஆர்.எஸ்.பாரதி சார்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் இன்று (13.1.2020) முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றும் அதை அறிவிக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தி.மு.க. அமைப்புச் செயலாளர் எஸ். பாரதி தொடர்ந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளதால் அந்த மனுவுடன் கூடுதல் மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 நிமலன்