இலங்கை தமிழர் பிரச்னையை கையிலெடுக்கும் ரஜினி!

slider அரசியல்

 

ரஜினி-விக்னேஷ்வரன்

 

 

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு எப்படியும் கட்சியைத் தொடங்கி பரபரப்பான அரசியலுக்குள் வருவார் என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ரஜினி அண்ணன், தமிழருவி மணியன் போன்றோரும் ரஜினி நிச்சயம் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் அடிக்கடி சொல்லி வருகிறார். இது குறித்து ரஜினியிடமிருந்து நேரடியான தெளிவான பதில் ஒன்றும் வராமலே இருந்து வருகிறது. இந்நிலையில் ரஜினி நடித்த  ‘தர்பார்’ வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் ரஜினியை சந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமையான (12.1.2020) நேற்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து ஊடகங்கள் உட்பட யாருக்குமே முன்பாக தெரிந்திருக்கவில்லை. ரஜினியை சந்தித்த பின்னர் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. இந்த சந்திப்பின்போது இலங்கை அரசியல் பற்றியும், அங்குள்ள தமிழர்கள் நிலைமைகள் பற்றியும், விக்னேஸ்வரன் ரஜினியிடம் எடுத்துரைத்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசு கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும்  ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.    எப்போதும் ரஜினி படத்திற்கு இருப்பது போல இந்த படத்திற்கும் பெரிய அளவில் ஓப்பனிங் இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

இந்நிலையில்தான் நேற்று ரஜினி – விக்னேஸ்வரன் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. ரஜினியை பொறுத்தவரை கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படும்போது சில கருத்துகள் சொல்லியுள்ளார். ஆனால், இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பெரியளவில் கருத்து சொன்னது இல்லை. இந் நிலையில் ரஜினி இப்போது இலங்கை வடக்கு மாகாண முதல்வராக பதவி வகித்த விக்னேஸ்வரனை தனது வீட்டில் சந்திக்கிறார். இலங்கை தமிழர்கள் குறித்து விவாதிக்கிறார் என்றால், நிச்சயம் தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்கள் பிரச்னை எந்தளவுக்கு தகம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தே இந்த சந்திப்பை ரஜினி நடத்தியுள்ளார்  என்றும், இதன் பின்னணியில் ரஜினி ஏதோ பலத்த அரசியல் வியூகங்களை வகுக்க தொடங்கியுள்ளார் என்றும், இது போன்ற நடவடிக்கைகள் அவர் அரசியல் கட்சி விரைவில் தொடங்கவுள்ளதை வெளிபடுத்தும் சமிக்ஞைகள் என்கிறார்கள் மூத்த அரசியல் விமர்சகர்கள்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்