நளினி விடுதலைக்கு எதிராக மத்திய அரசு மனுத் தாக்கல்!

slider அரசியல்

 

nalini-murugan

 

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இதன் தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கைதாகிய முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேர் கடந்த 28 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்களில் நளினி சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்திருந்தார். இதற்கு மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறையிலுள்ள நளினி தான் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில்,  ’’பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு இதுவரை தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எனவே என்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், ஐகோர்ட்டில் என்னை ஆஜர்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தில் எல்லோராலும் கவனிக்கப்படும் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் முன்பு நேற்று (7.1.2019) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜரானார். அவர். ‘’நளினியை விடுவிக்ககோரிய மனுவை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு நிராகரித்து உத்தரவிட்டுள்ளது’’ என்று கூறி அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார். இதையடுத்து இந்த வழக்கை வருகிற 28-ந்தேதி தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க., எதிர்க் கட்சியான தி.மு.க. மற்றும் பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் கோரிக்கையாக தொடர்ந்து வைத்து வருவது இந்த ஏழுபேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான். இதில் மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் வழிமுறையைத்தான் இப்போது ஆட்சியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருந்துவரும் பா.ஜ.க.வும் கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்