சூடுபிடிக்கும் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் தேர்தல்!

slider அரசியல்

 

ஜான்சி ராணி

 

 

 

தமிழகத்தில் எதிர்வரும் 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருக்கிறார். தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஜான்சி ராணி இருந்து வருகிறார். இவரது பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. இதனால் அடுத்த தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க பெருந்தலைகளிடையே பலத்த போட்டி எழுந்துள்ளது.

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஜான்ஸிராணி நியமிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் அந்த இடத்திற்கு புதிய நபர் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம்  திட்டமிட்டுள்ளது. இதனால் அதற்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு, மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க தமிழக மகிளா காங்கிரஸ் பெருந்தலைகளிடையே பெருத்த போட்டி ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, அடுத்த தமிழக மகிளா காங்கிரஸுக்கு ஹசீனா சையத் என்பவர் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.  இதற்கு காரணமாக, அவர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருப்பது என்பதும்,  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்பதும் காரணமாக சொல்லப்படுகிறது.

அதேநேரத்தில், தற்போது தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராகவுள்ள ஜான்சி ராணியும் வரும் சட்டமன்ற தேர்தல் வரை தனது பதவியை தக்க வைக்க படாதபாடுபட்டு வருவதாகவும், தனக்கு நெருக்கமான டெல்லி மேலிடத் தலைவர்களிடம் இது குறித்து பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவர் தவிர, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளாகவுள்ள   சுமதி அன்பரசு, வழக்கறிஞர் சுதா உள்ளிட்ட பலரும் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாகவும், கர்நாடக எம்.எல்.ஏ.வும், தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளருமான சவுமியா ரெட்டி, தமிழக மகிளா காங்கிரஸுக்கு புதிய தலைவர் நியமிப்பதற்கான பணிகளை தொடங்கி விட்டார் என்றும், அவர் ஐந்து பேர் கொண்ட பட்டியலையும் முதற்கட்டமாக தயார் செய்து டெல்லிக்கு அனுப்பிவிட்டார் என்றும் தமிழக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்