சச்சின், விராட் கோஹ்லி கடும் எதிர்ப்பு!

slider விளையாட்டு
சச்சின்-கோஹ்லி

 

சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐ.சி.சி. தற்போது நடைபெற்றுவரும் ஐந்து நாள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டை நான்கு நாட்களாக குறைக்கும் பரிசீலனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கங்கள் ஆதரவு தெரிவித்தபோதிலும், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உட்பட பல முன்னாள் மற்றும் இந்நாள் பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி ‘‘தற்போது நான்கு நாட்கள் என்று சொல்கிறார்கள். அதற்குபின் மூன்று, இரண்டு என்பார்கள். பின்னர் டெஸ்ட் போட்டி தேவையில்லை என்பார்கள்’’ என்று இதற்கு எதிர்ப்பாக தனது கோபத்தை  கடுமையாக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி சச்சின் தெண்டுல்கர் கூறும்போது, ‘‘ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஆடுகளத்தின் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். இது சுழற்பந்து பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதை சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி. சுழற்பந்து வீச்சாளர்களின் சாதகத்தை பறிப்பது நியாயம் தானா?. டி-20 கிரிக்கெட் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. தற்போது டி-10 கூட வந்துவிட்டது. விரைவில் 100 பால் கிரிக்கெட் வர இருக்கிறது. கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகள்தான் தூய்மையான வடிவம். அதில் கறைபட்டுவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.

   -எஸ்.எஸ்.நந்தன்