உள்ளாட்சி பின்னடைவால் வெகுண்டெழுந்த முதல்வர், துணை முதல்வர்!

slider அரசியல்

 

ops-eps

 

தமிழகத்தில் சமீபத்தில் வெளியான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வைவிட எதிர்க் கட்சியான தி.மு.க. சற்று அதிக இடங்களைப் பெற்றுள்ளது. மேலும், 70 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. இது கிராமப் பகுதியில் செல்வாக்காகத் திகழ்ந்து வரும் அ.தி.மு.க.வுக்கு பெரும் சறுக்கலாக அமைந்துள்ளது. ஆகவே, இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமைகளான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளதால், இந்தப் பின்னடைவு குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே பல்வேறுகட்ட விசாரணை துவங்கியுள்ளனர். இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டமன்றக் கூட்டம் கவர்னர் உரையுடன் துவங்கியது. இதில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கியிருந்தது. இவ்வளவு முக்கியமான நிகழ்வு சட்டமன்றத்தில் நடைபெற்றபோதும், முதல்வரும், துணை முதல்வரும் வேறு ஒரு நிகழ்ச்சிக்கு அன்றைய தினம் மாலை நேரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு என்ன காரணம் என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு நேரம் ஒதுக்கி விவாதித்தனர். இந்தக் கூட்டங்களில் முதல்வரும், துணை முதல்வரும் கடுமையாக நடந்து கொண்டனர் என்றும், இனிமேல் இப்படி தோல்வி வராமல் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதன்பிறகு கூட்டணிக் கட்சியான பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. நிர்வாகிகளுடனும் இருவரும் ஆலோசனை நடத்தினர். அனேகமாக, இந்த ஆலோசனை ஒன்றிய, மாவட்ட சேர்மன், துணை சேர்மன் குறித்து இருந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒன்று அல்லது இரண்டு ஊராட்சி ஒன்றியங்கள் ஒரு நகராட்சி அல்லது பேரூராட்சியை கொண்டதாகவே இருக்கமுடியும். எப்போதும் கிராமப் புறங்களில் அ.தி.மு.க.வுக்கே வாக்கு அதிகம் விழும் என்று சொல்லப்படும் நிலையில், இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவு மூலமாக தமிழக கிராமங்களில் தனக்கான செல்வாக்கை இழந்திருப்பது அ.தி.மு.க.வை பயமுறுத்தியுள்ளது. அதனால்தான் முதல்வரும், துணை முதல்வரும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதை வைத்து அறிய முடிகிறது என்கிற பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் வேகம் எடுத்துள்ளது.

  • தொ.ரா.ஸ்ரீ.