இனி வாரம் மூன்று நாள் விடுமுறை – பின்லாந்து பிரதமர் அதிரடி!

slider உலகம்

 

சன்னா மரீன்

 

ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமராக 34 வயது நிரம்பிய சன்னா மரீன் என்பவர் கடந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி பதவி ஏற்றார்.  இதனால் இவர்  உலகின் இளம் பிரதமர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். இவர் பின்லாந்தின் 3-வது பெண் பிரதமர் ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது தொழிலாளர்கள் வேலை விஷயத்தில் எடுத்துள்ள முடிவு உலகளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் 6-ம் தேதி பதவியேற்றதிலிருந்தே சன்னா மரீன் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுத்து வந்தார். தற்போது பின்லாந்திலுள்ள தொழிலாளர்கள் விஷயத்திலும் முற்போக்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அது என்னவென்றால், இனி பின்லாந்தில் தொழிலாளர்கள் வாரத்திற்கு நான்கு நாள் மட்டும் வேலை பார்த்தால் போதும். மீதம் உள்ள மூன்று நாட்கள் விடுமுறை, ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற அதிரடி அறிவிப்பை சன்னா மரீன் தற்போது வெளியிட்டுள்ளார். இதன் மூலம், தொழிலாளர்கள் தங்கள் விடுமுறை காலத்தையும், வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தையும் தங்கள் குடும்பத்தினருடன் செலவிட முடியும். இதனால் அவர்கள் வேலை நாட்களின்போது வேலையில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

எனவே,  தற்போதுள்ள உற்பத்தியை விட மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று சன்னா மரீன் என்று இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த திட்டம் விரைவில் அமலாக உள்ளதாம். இந்த திட்டத்திற்கு பின்லாந்தில் தொழிலாளர்கள், பல்வேறு துறை ஊழியர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே பின்லாந்து நாட்டில் 1996-ன் வேலை நேர ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதன்படி தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரத்தை மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவோ அல்லது மூன்று மணி நேரம் கழித்தோ தொடங்கி குறிப்பிட்ட மணி நேரங்கள் வேலை செய்து கொள்ள அனுமதிக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.  பின்லாந்தின் அண்டை நாடான சுவீடன் 6 மணி நேர வேலை நாட்களை செயல்படுத்துவதன் மூலம் ஊக்கமளிக்கும் முடிவுகளை சுட்டிக் காட்டி உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், அதிக உற்பத்தி திறன் கொண்டவர்களாகவும் இருப்பது தெரிய வந்துள்ளதால் இந்த முடிவை பின்லாந்து அதிபர் எடுத்துள்ளதாகவும் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • விசாகன்