அ.தி.மு.க.வை நெருக்கும் கூட்டணிக் கட்சிகள்!

slider அரசியல்
ops-eps

 

தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணியைவிட தி.மு.க. கூட்டணி முன்னிலை பெற்றுவிட்டதால், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. இந்நிலையில் மேலும் ஓர் அதிர்ச்சியாக அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் யாவும் அதிகளவில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் தலைவர் பதவியை கேட்டு வற்புறுத்த தொடங்கிவிட்டன. இந்த விவகாரம் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே மோதலாகவும், விரிசலாகவும்கூட சென்று முடிய வாய்ப்புள்ளதாகவும் தற்போது பேச்சு கிளம்பியிருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவின்படி 26 மாவட்ட கவுன்சில் தலைவர் பதவியை அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 13க்கு 13 என்கிற சரிநிகர் விகிதத்தில் பெறும் நிலையில் உள்ளனர். அடுத்து 515 ஒன்றிய கவுன்சில் பதவிகளில் 313 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது. ஆகவே, ஒன்றிய சேர்மன் பதவியிலும் அ.தி.மு.க.வைவிட தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிகம் பெறும் நிலையில் உள்ளனர்.

இன்னொரு பக்கத்தில் தி.மு.க.வைவிட மிகவும் பின்தங்கிவிடாமல், இன்னும் சொல்லப் போனால் பாதிக்குப் பாதி என்கிற விகிதாசாரத்தில் சற்றே தான் அ.தி.மு.க. பின்தங்கியுள்ளது. இதை ஒன்றும் பெருத்த தோல்வி என்று சொல்ல முடியாது என்றும் ஊடங்கங்களில் கருத்துகள் பரிமாறப்படுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க.வுக்கு சோதனை அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க.விடமிருந்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பா.ம.க. ஒன்றிய சேர்மன் பதவிகளில் 20 கேட்பதாகவும், அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை 10 கொடுக்க எண்ணியுள்ளதாகவும், இதனால் பா.ம.க. கோபமடைந்துள்ளதாகவும் ஒரு தகவல்.

அடுத்து இதேபோல் தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க. தலைமை கொடுக்க நினைக்கும் எண்ணிக்கைக்கும், தே.மு.தி.க. தலைமை பெற நினைக்கும் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாடு காரணமாக அவ்விரு கட்சிகளுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் இன்னொரு தகவல்.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் இன்னொரு கூடட்ணி கட்சியான பா.ஜ.க.வோ,  பேச்சுவார்த்தைக்கே இன்னும் வரவில்லையாம். எப்படியும் நாம் நினைப்பதைவிட பா.ஜ.க. தரப்பு அதிகமாகத்தான் கேட்கும் என்று அ.தி.மு.க. இரட்டை தலைமை எண்ணுகிறது என்றும், இதை எப்படி சமாளித்து முடிக்கப் போகிறோமோ என்கிற தவிப்பில் இரட்டை தலைமையுள்ளதாகவும் அ.தி.மு.க. தலைமை கழக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 – தொ.ரா.ஸ்ரீ.