நித்தமும் அதிகரிக்கும் நித்தியானந்தா மர்மம்!

slider அரசியல்

 

nithyananda-நித்தியானந்தா

 

 

இந்தியளவில் சர்ச்சைக்குப் பெயர் பெற்ற சாமியார் நித்தியானந்தாவை குஜராத் கோர்ட்டு உத்தரவுபடி குஜராத் மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து தேடி வருகின்றன. கொஞ்ச நாளுக்கு முன்பு மலேசியாவில் உள்ளார் நித்தியானந்தா என்றும், அதற்கு முன்பு ஈக்வடார் நாட்டில் உள்ளார் என்றும் ஊடகங்கள் மூலம் தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் தற்போது நித்தியானந்தா குறித்து எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை என்று மத்திய அரசு சொல்லியுள்ளது. இது நித்தியானந்தா விவகாரத்தில் மேலும் ஓர் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தற்போது சூடுபிடித்திருக்கும் நித்தியானந்தா விவகாரத்துக்கு குஜராத் கோர்ட்டு உத்தரவுதான் ஆரம்பம் என்றாலும், இப்போது இன்னொரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டும் நித்தியானந்தவை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. இதனால், மத்திய அரசு வெகு தீவிரமாக நித்தியானந்தா விவகாரத்தை கையிலெடுத்து தேடலைத் துவங்கியுள்ளது. வெளிநாடுகளிலும் தூதரகங்கள் மூலம் தேடுதல் வேலையை முடுக்கிவிட்டுள்ளது. மத்திய உளவுத்துறையும் களத்தில் இறங்கியிருக்கிறது. இதனால் விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என்கிற நம்பிக்கை அனைவரிடமும் வந்தது.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீ‌‌ஷ்குமார் டெல்லியில் 02.1.2020 தினத்தன்று செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசுகையில், “நித்யானந்தாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாங்கள் பல நாடுகளின் தூதரகங்களையும், அரசுகளையும் நாடியுள்ளோம். நித்யானந்தா குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு இருக்கிறோம். ஆனால், இது தொடர்பாக ஈக்வடார் நாட்டை தொடர்பு கொண்டபோது அவர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தம், நித்தியானந்தா குறித்து எந்த தகவலும் எங்களிடம் இல்லை என்பதுதான்!

நித்தியானந்தாவை குஜராத் அரசு சார்பில் கைது செய்ய முயற்சிகள் தொடங்கியதிலிருந்தே ஏதோவொரு நாட்டில் இருந்துகொண்டு தினமும் சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார் நித்தியானந்தா. இப்போது இது மத்திய அரசின் நேரடி விஷயமாகவும் இந்த பிரச்னை ஆனநிலையிலும், நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் வழக்கம்போலவே தொடர்ந்தவண்ணம் தான் உள்ளன. ஆனால், இப்போது திடீர் அதிர்ச்சியாக தங்களிடம் நித்தியானந்தா குறித்து எந்தத் தகவலும் இல்லை என்று மத்திய அரசு கைவிரித்த நிலையில் இன்னும் கொஞ்சநாளுக்கு நித்தியானந்தா மர்மம் அதிகரித்தபடி இருக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.

  • தொ.ரா.ஸ்ரீ.