துவங்கிவிட்டதா மூன்றாம் உலகப் போர் ?

slider உலகம்
144

 

ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்தில், அமெரிக்க ராணுவத்தின் ராக்கெட் குண்டுகள் மூலம் 2.1.2020 தேதியன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோலிமானி, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.  ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியது. இந்த நிகழ்வுக்குப் பிறகு இரண்டு நாட்டுக்கும் இடையே போர்ப் பகை மூண்டுள்ளது. இது மூன்றாம் உலகப் போரை உருவாக்கிடுமோ என்கிற பேச்சும் உலகமெங்கும் எழுந்து பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம், ஈரான் பின்னணியில் ஹிஸ்புல்லா ஆதரவாளர்களால் சூறையாடப்பட்டது. இதற்கு ஈரான்தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

அமெரிக்க அதிபர் இந்த எச்சரிக்கை விடுத்த சில நாளிலே இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் ஈரானின் ராணுவ தளபதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் ஈரானை மிகவும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஈராக்கில் அமெரிக்க தூதரக அதிகாரிகளையும், அமெரிக்கர்களையும் தாக்க காசிம் சோலிமானி திட்டமிட்டிருந்ததால், முன்கூட்டியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

ஈரான் மீதான் இந்தத் தாக்குதலை ரஷ்யாவும், சீனாவும் கண்டித்துள்ளது. இது சர்வதேச தாக்குதல் விதிகளுக்கு புறம்பானது. இது பெரிய அளவில் பிரச்னையை உண்டாக்கும். அமெரிக்கா உடனடியாக அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று சீனா, ரஷ்யா இரண்டு நாடுகளும் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால், பெரும்பாலும், ஈரானுடன் சீனாவும், ரஷ்யாவும் கைகோர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒருவேளை ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது மிகப் பெரிய சண்டைக்கு வழி வகுக்கும். ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் அதன் நட்பு நாடுகளும் ஒன்றாகச் சேர்ந்து அமெரிக்காவையும், சவுதியையும் தாக்க நினைக்கும். ஆகவே, இது உலக அளவில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.  அமெரிக்காவுக்கு எதிராக ஒருவேளை சீனா, ரஷ்யா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் கைகோர்க்கும்பட்சத்தில்  இன்னொரு பக்கம் அமெரிக்கா, துருக்கி, சவுதி, சிரியாவின் போராளி படைகள் ஒன்றாக சேரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நாடுகள் எதிரும் புதிருமாக மோதினால் மற்ற உலக நாடுகளும் சண்டையில் கைகோர்க்கும். இது சன்னி – ஷியா நாடுகளுக்கு இடையிலான பிரச்னையாகவும் மாறும். ஏற்கனவே ஈரான் மீது பொருளாதார தடைவிதித்தபோது அதை சீனா மதிக்கவில்லை. கடைசியில் அமெரிக்கா பலமுறை எச்சரிக்கை விடுத்த பின்னரே சீனா அந்தத் தடையை மதித்தது. ஆனால், ஈரான் மீதான தடையை இப்போது ரஷ்யாவும் பெரிதாக கண்டுகொள்வது கிடையாது என்பதும் கவனிக்கத்தக்கது.

இதனிடையே சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக யுத்தமும் நடந்து வருகிறது. அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா தொடர்ந்து வரியை அதிகரித்து வருகிறது. அமெரிக்காவும் சீனாவின் பொருட்களுக்கு விலையை உயர்த்தி, பொருளாதார சண்டையை தொடர்ந்து வருகிறது. இதுவும் இந்தப் போருக்கு உரம் போடும்.

சீனா, ஈரானுடன் சேர்ந்து வடகிழக்கு நாடுகளை கட்டுப்படுத்த முயன்று வருகிறது. அதற்கு இந்த போர் ஒரு வகையில் உதவும் என்றும், ஈரான் மூலம் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தலாம் என்று சீனாவும், ரஷ்யாவும் நம்புவதாகவும்,   இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளை கட்டுப்படுத்தினால், எண்ணெய் வர்த்தகத்தை தனது கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று சீனா கணக்கு போடுவதாகவும், இந்த முரண்பட்ட காரணங்களால் மூன்றாம் உலகப்போருக்கான சூழல் தென்படத் தொடங்கியுள்ளதாக  சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருத்து கூறியுள்ளனர்.

 

  • எஸ்.எஸ்.நந்தன்