உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை ஜெயிக்க வைத்தது எது?

slider அரசியல்
kiramasabaikootam

 

சமீபத்தில் வெளியான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை எதிர்க் கட்சியான தி.மு.க. பின்தள்ளி முன்னிலை பெற்றது மட்டுமல்லாமல், வாக்கு சதவீதத்திலும் 70 சதவீதத்துக்கு மேல் பெற்றுள்ளது. இது தி.மு.க. வரலாற்றில் ஊரகப் பகுதிகளில் ஒரு சாதனை என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெற்றி குறித்து தி.மு.க. தலைவர்கள் மத்தியிலே வியப்பு நிலவதாகவும் பேசப்படுகிறது. இந்த சாதனை அடுத்து வரவுள்ள நகர்ப் பகுதிகளுக்கான தேர்தலிலும் தி.மு.க.வுக்கு பெரும் வெற்றியை பெற்றுத்தரும் என்றும் தமிழக அரசியலில் தீவிர பேச்சு எழுந்துள்ளது.

தி.மு.க.வின் இந்த ஊரக வெற்றிக்கான காரணம் குறித்து பலவாறாக அலசல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.  தி.மு.க. நிர்வாகிகள் சிலரிடம் இது குறித்து கேட்டோம். அவர்கள், “சென்ற ஆண்டு பாதியில் கிராமம் கிராமமாக பயணித்த மு.க.ஸ்டாலின் அங்கு கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஸ்டாலினின் இந்த முயற்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பலருக்கும் புரியாத புதிராக இருந்தது. இப்போது ஊரகப் பகுதிகளில் தி.மு.க. இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்த பிறகுதான் அவர்களுக்கு இதற்கான விடை கிடைத்துள்ளது’’ என்று சொன்னார்கள்.

நாட்டிலேயே முதன் முறையாக எதிர்க்கட்சியாக இருக்கும் ஓர் அரசியல் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்களை நடத்திய பெருமை தி.மு.க.வை சேரும். கிராம மக்களை சந்தித்து அவர்களின் மனதில் உள்ள நிறை குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் இந்தக் கூட்டங்களை நடத்தினார் மு.க.ஸ்டாலின். இதனால்தான் கிராமப் பகுதிகளில் அதிக வாக்கு வங்கியை வைத்திருக்கும் அ.தி.மு.க.வின் செல்வாக்கை உடைத்து தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • நிமலன்