அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவர் இவர்தான்?

slider அரசியல்

 

abmuruganandam-ஏ.பி.முருகானந்தம்

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப் பட்டார். இதன்பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி என்பது காலியாகவே இன்றுவரை  இருந்து வருகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு விரைவில் தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்படவுள்ளதாகவும், இந்த தலைவர் பதவிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தலைவர் பதவிக்கு தமிழக பா.ஜ.க. பிரபலங்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், இல. கணேசன், வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், குப்புராமு, கே.டி. ராகவன், ஏ.பி.முருகானந்தம் உள்பட இவர்களில் ஒருவர் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஜனவரி இறுதிக்குள் தமிழக பா.ஜ.க. தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் டெல்லி பா.ஜ.க.  வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், வேறு தகவல்களும் வெளியாகி வருகின்றன. அது என்னவென்றால், பா.ஜ.க.வின் தேசிய தலைமையில், தமிழகளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பதவியை சீனியர்களுக்கு கொடுப்பதா? அல்லது இளைஞர்களுக்கு கொடுப்பதா? என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும், அனுபவம் வாய்ந்தவர்களை ஆலோசனைக்காக மட்டும் கட்சியில் வைத்துக்கொண்டு பதவியை இளைஞர்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் என மேலிடத் தரப்பில் கணக்கு போடப்பட்டுள்ளதாகவும், அப்படி சீனியர்களுக்கு பதவி கொடுக்காமல் ஜூனியர்களுக்கு கொடுத்தால் கட்சிக்குள் மனக்கசப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜ.க.வின் டிவி விவாத முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கருத்து கேட்டோம். அவர் நம்மிடம், “ஒருவேளை  இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அந்தப் பட்டியலில்  கோவையைச் சேர்ந்த கட்சியின் தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தத்திற்கு அதிக வாய்ப்பிருப்பிருக்கிறது’’ என்றார்.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்