ரஜினிக்கு வலைவிரிக்கும் காங்கிரஸ்!

slider அரசியல்

 

rajini

கடந்த 2014-ம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான பா.ஜ.க. கட்சி மத்தியில் ஆளுங்கட்சியாக வந்ததிலிருந்து, பா.ஜ.க. அரசு கொண்டுவந்த திட்டங்களை தமிழகளவில் ஆதரித்தவர்களில் நடிகர் ரஜினிகாந்தும் ஒருவர். குறிப்பாக, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்களைச் சொல்லலாம். இது போன்ற காரணங்களை வைத்து ரஜினிகாந்த் ஒருவேளை கட்சி ஆரம்பித்தால், அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் சார்பில் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்கவும், இதற்காக தி.மு.க.வை கைழுவவும் காங்கிரஸின் தேசிய தலைமை முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் கட்சி மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்கள், “இந்த உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு வி‌ஷயத்தில் தி.மு.க.வுக்கும் காங்கிரஸுக்கும் பல்வேறு மனக்கசப்புகள் உருவாகிவிட்டன. அதே நேரத்தில் ரஜினியை நம்பி பயன் இல்லை என்ற முடிவுக்கு பா.ஜ.க.வும் வந்துவிட்டது. கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, இந்த ஆண்டு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

மேலும், காங்கிரஸ் கட்சியில் ப.சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமான நண்பர்கள் ரஜினிக்கு உண்டு. கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ரஜினியோடு பேசி வருகிறார்கள். கேரளத்திலிருந்து  ஏ.கே.அந்தோணி, மராட்டியத்தில் சுப்ரியா சுலே போன்றவர்கள் ரஜினியோடு பேசி பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இதை ரஜினி தனக்கு நம்பிக்கையான தமிழ்நாட்டு அரசியல் நண்பர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்’’ என்று கூறினார்கள்.

அடுத்ததாக   காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ரஜினியின் நண்பர்கள் சிலர், ரஜினியிடம் உங்களுக்கு மதங்களைக் கடந்த ஆன்மிகவாதி என ஒரு நற்பெயர் உள்ளது. அதன் அடிப்படையில் காங்கிரஸோடு நீங்கள் சேர வேண்டும். நீங்கள் சம்மதித்தால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வரும். காங்கிரஸ் வருவதாக இருந்தால் தி.மு.க. கூட்டணியில் இருந்து மேலும் சில கட்சிகளும் கூட வரலாம். காங்கிரஸின் தேசியம் தான் இப்போது உங்களுக்குச் சரியாக இருக்கும்’’ என்று சொல்லியிருக்கிறார்கள்.  வழக்கம்போல் ரஜினி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, ‘பார்க்கலாம்‘ என்று சொல்லியிருக்கிறாராம்.

இப்படி ரஜினி – காங்கிரஸுடன் சேரக்கூடும் என்பதற்கு வேறு சில காரணங்களும் இருக்கிறது. அதில் முக்கியமாக ஒரு காரணத்தை முன்வைக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அது என்னவென்றால்,   சமீபத்தில், ரஜினியைச் சீண்டி உதயநிதி தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதுபற்றி ரஜினி பதில் அளிக்கவில்லை என்றாலும் கடும்கோபத்தில் இருந்தாராம்.

தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸைக் கழற்றிவிட்டால் தி.மு.க.வின் பலம் குறையும் என்றும், ரஜினி கட்சி தொடங்கும் சமயத்தில் இது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கிறோம் என்றும் ரஜினி வட்டாரத்தில் பேசப்படுகிறது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

-தொ.ரா.ஸ்ரீ.