மேற்கு வங்க அரசுக்கு தடை விதித்தது மத்திய அரசு

slider அரசியல்
modi-mamtha

 

மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்துவருகிறது திரிணாமுல் காங்கிரஸ். இந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்து வருகிறார். பா.ஜ.க. சார்பில் மோடி பிரதமராக வந்ததிலிருந்தே அவருக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் எதிர்ப்பு அரசியல் செய்து வருகிறார். சமீபத்தில் பா.ஜ.க. அரசு கொண்டுவந்த சி.ஏ.ஏ. சட்டத்தை தங்கள் மாநிலத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சொல்லி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் வரும் 26-ம் தேதி அன்று குடியரசு தின விழாவில் மேற்கு வங்காள அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இது மேற்கு வங்காள அரசியலில் பெரும் சலசலப்பை இப்போது ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 26-ம் தேதி  குடியரசு தினம் நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையெட்டி டெல்லியில் குடியரசு தின விழா மிகப் பிரமாண்டமான நடக்கும். இதில் வெளிநாட்டு தலைவர்கள்,  சிறப்பு விருந்தினர்கள் என்று பலர் கலந்து கொள்வர். இந்த விழாவில் இந்தியாவின் கலாச்சார சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் கண்கவர் அணி வகுப்பு நடைபெறும். குடியரசு தின விழாவில் ஜனாதிபதி கொடியேற்றி முடித்த பிறகு டெல்லி ராஜ பாதையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம்.

இந்த அணிவகுப்பில் மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகம் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். இந்த ஆண்டு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 32 அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. இதுபோல மத்திய அமைச்சகங்களும் 24 வகையான அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தன. மொத்தம் 56 அலங்கார ஊர்திகளுக்கான பரிந்துரையில் எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கொடுப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்தது. இதற்காக அதிகாரிகள் ஐந்து தடவை கூடி விவாதித்தனர். அப்போது 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.  இதில் 16 ஊர்திகள் மாநிலங்கள் சார்பில் பங்கேற்கவும், 6 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்திருந்த மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க அலங்கார ஊர்தியில்  சில காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை  மீறும் வகையில் இருந்ததாகவும், இதற்கு ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இதைத்தொடர்ந்தே மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும் டெல்லி வட்டார அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்காளத்தின் அலங்கார ஊர்தியை புறக்கணித்து இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி  வருகின்றனர். குறிப்பாக,  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகதாராய் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட்டு சேர்ந்து மேற்கு வங்காளத்துக்கு எதிராக செயல்பட்டு உள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளுங் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும், எதிர்க் கட்சியாக செல்வாக்கு பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு கடும் போட்டி நடக்கவுள்ளது.

நிமலன்