நெல்லை கண்ணன் கைதில் நடந்தது என்ன?

slider அரசியல்
nellai-kannan-நெல்லை-கண்ணன்

 

கடந்த ஞாயிற்றுக் கிழமை (29.12.2019) அன்று திருநெல்வேலியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்  நடத்தியது. அந்தக் கூட்டத்தில் பேச்சாளரும், எழுத்தாளருமான நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தரக்குறைவாக பேசியதாக அமைந்த பேச்சு காணொளி இணையத்தில் பகிரப்பட்டது. இதனால் தமிழக பா.ஜ.க.வினர் கொந்தளிப்பு அடைந்து நெல்லை கண்ணனைக் கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் புத்தாண்டு அன்று பெரம்பலூரில் நெல்லை கண்ணன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்தக் கைதுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தமிழகத்தில் பல்வேறு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியதால் பரபரபரப்பு எற்பட்டுள்ளது.

இந்த கைதுக்கு முன்பு நடந்தது என்ன என்று சில தகவல்கள் கிடைத்துள்ளது. அதை கொஞ்சம் அலசுவோம்:

திருநெல்வேலி சம்பவத்தை முன்னிட்டு நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டதால், அவர் தனது வீட்டை விட்டு வெளியே செல்ல காவல்துறை அனுமதி மறுத்து வந்தது. இதன்பிறகு திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அதன்பிறகு, அங்கிருந்து மதுரையிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்னொரு பக்கத்தில் நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டுமெனக் கோரி பா.ஜ.க.வின் தேசியச் செயலர் எச். ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டவர்கள் சென்னையில் போராட்டம் நடத்த முயன்று கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெரம்பலூர் அருகே குரு லாட்ஜ் என்ற தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் தங்கியிருப்பதாக தகவல் அறிந்து அம்மாவட்ட காவல்துறையினர் அங்கு வந்தனர். இந்த தகவல் அறிந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினரும் பா.ஜ.க.வினரும் அப்பகுதியில் குவிந்தனர். இதனால் இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், அங்கிருந்து நெல்லை கண்ணனை காவல்துறையினர் காரில் அழைத்துச் சென்றனர்.

அடுத்து நெல்லை கண்ணனைக் கைது செய்வதற்காக திருநெல்வேலியிலிருந்து வந்த காவல்துறையினரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நெல்லை கண்ணனை பிப்ரவரி 13 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். உடனடியாக நெல்லை கண்ணனை ஜாமீனில் எடுக்கும் வேலைகளும் அவரது அதரவாளர்களால் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நெல்லை கண்ணன் கைது தொடர்பாக, அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால், ராஜீவ் காந்தியை கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

   – எம்.டி.ஆர்.ஸ்ரீதர்