நானா, நீயா? கேரளாவில் முதல்வருக்கும் கவர்னருக்கும் நடக்கும் சட்ட யுத்தம்

slider அரசியல்
பினராயி-விஜயன்

 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கேரள மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணியும், பிரதான எதிர்க் கட்சியான காங்கிரஸும் எதிர்க்கிறது. ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் சேர்ந்தே இந்த சட்டத்தை எதிர்ப்பதால், இரண்டு கட்சிகளும் சேர்ந்து குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேரள சட்டப்பேரவையில் கடந்த சனிக்கிழமை (28.12.2019) தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு மத்திய அமைச்சர்கள் சிலர் உடனடியாக கண்டம் தெரிவித்தனர். இப்போது கேரள கவர்னரும் இதற்கு எதிப்பாக பேசியுள்ளதால் கேரளாவில் இந்த விவகாரம் அரசியல் சூட்டைக் கிளப்பியுள்ளது.

 

கேரள ஆளுநர்

கேரள அரசு சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய பின்னர், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது பட்டியலில் இருக்கிறது. இதை நீக்குவதற்கும், புறக்கணிப்பதற்கும் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. நாடாளுமன்றம் மட்டுமே இதற்குத் தனி அதிகாரம் படைத்தது. ஆகவே, கேரள சட்டப்பேரவை மட்டுமல்ல எந்த சட்டப்பேரவையாக இருந்தாலும் அதிகாரம் கிடையாது” எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் இந்த பேச்சுக்கு  உடனடியாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளிக்கையில், “ஒவ்வொரு மாநிலச் சட்டப்பேரவைக்கும் சிறப்பு உரிமை இருக்கிறது. சட்டப்பேரவைக்கு என அரசியலமைப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கின்றன. அதை ஒருபோதும் மீறக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வரின் இந்தப் பேச்சுக்குப் பதில் அளித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த முடியாது என்று கூற முடியாது. அது மாநில அரசுகளின் அரசியலமைப்புச் சட்டக் கடமை. ஏனென்றால், மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் என்பது அரசியலமைப்பில் மத்திய அரசின் பட்டியலில் உள்ளவற்றின் மீது சட்டம் இயற்றியுள்ளது. இதை நடைமுறைப்படுத்த முடியாது என்று மாநில அரசுகள் கூற முடியாது” எனத் பதிலடி தந்திருந்தார்.

ravishankar-prasad-ரவிசங்கர்-பிரசாத்

 

இந்நிலையில், கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் நேற்று (2.1.2019) திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேரள அரசு சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

இந்தக் கேள்விக்கு கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான், ‘’குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், அதை ரத்து செய்யவும் கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து இல்லை. ஏனென்றால், குடியுரிமை என்பது மத்திய அரசின் பட்டியலில் இருக்கிறது. இதில் மாநில அரசு செயல்படுவதற்கு எந்தவிதமான முகாந்திரமும், பங்கும் இல்லை. கேரள மாநிலத்துக்குத் தொடர்பில்லாத இதுபோன்ற விஷயங்களில் எதற்காக இந்த அரசியல் கட்சிகள் ஈடுபடுகிறார்கள். இந்தியப் பிரிவினையின்போது, தென் மாநிலமான கேரளா எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. சட்டவிரோதக் குடியேறிகள் யாரும் வராதபோது கேரள மாநிலத்துக்குத் தொடர்பில்லாத விஷயம். கண்ணூரில் 80-வது இந்திய வரலாற்று மாநாட்டில் நான் பங்கேற்று சிஏஏ குறித்துப் பேசியபோது, எனக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்திய வரலாற்று மாநாடு சில பரிந்துரைகளை மாநில அரசுக்கு வைத்திருந்தது. அதில் மத்திய அரசுக்கு இணங்கிச் செல்லாதீர்கள் என்று கூறியிருந்தது. அதுபோன்ற பரிந்துரைகள் ஒட்டுமொத்தமாக சட்டவிரோதம், கிரிமினல் உள்நோக்கம் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவில் சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தது நின்றுபோய் இப்போது முதல்வர், மத்திய அமைச்சர், கேரள கவர்னர் என்று இந்த விவகாரம் இடம் பெயர்ந்துள்ளது.

தொ.ரா.ஸ்ரீ.