ஜார்க்கண்ட்டைப் போல் பீகாரிலும் மெகா கூட்டணிக்குத் தயாராகும் காங்கிரஸ்!

slider அரசியல்

 

லாலு-சோனியா

சமீபத்தில் நடந்துமுடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில், மாநில கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ். ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை பலத்துடன் இந்தக் கூட்டணி வெற்றியும் பெற்றது. எனவே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகியுள்ளார். இது அங்கு பா.ஜ.க.வுக்கு பெருத்த அடியாக அமைந்தது. இப்படியொரு வெற்றிக் கூட்டணியை இந்தாண்டு நடக்கவுள்ள பீகார் தேர்தலிலும் அரங்கேற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ள விஷயம் பா.ஜ.க.வின் தேசிய தலைமைக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில், அம் மாநிலத்தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா  தலைமையில் காங்கிரஸ் மற்றும்  லல்லு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி. கட்சிகளுடன் ஒரு மெகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் கட்சிதான் அரும் பாடுபட்டது. அதற்கு வெற்றியும் கிடைத்தது. இதே ஃபார்முலாவை பக்கத்து மற்றும் பெரிய மாநிலமான பீகாரிலும் அமல்படுத்த காங்கிரஸ் இப்போதே காய்களை நகர்த்த தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

பீகாரில் இப்போது நிதிஷ்குமார் கட்சி மற்றும் பா.ஜ.க.வின் கூட்டணி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். பீகாரில் செல்வாக்கான கட்சியாக விளங்கிவரும் லல்லு பிரசாத் யாதவின்   ஆர்.ஜே.டி.யின் தலைமையில் இந்த மெகா கூட்டணியை அமைக்க  காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.

இந்தக் கூட்டணியில் ராஷ்டிரிய உபேந்திர குஷாவாவின் லோக் சமதா கட்சி, முன்னாள் முதல்வர் ஜிதின் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா ஆகியவையும் இடம்பெற உள்ளன என்றும் சொல்லப்படுகிறது. மேலும்,  கடந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் இப்படியான ஒரு கூட்டணியை காங்கிரஸ் அமைத்திருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தக் கூட்டணியில் இடதுசாரிகள் இம்முறை இடம்பெறுவார்களா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் பீகார் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் தற்போதே தொடங்கிவிட்டதாகவும் தகவல் வருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக ஏப்ரல்,மே மாத வாக்கில் காங்கிரஸின் மெகா கூட்டணியின் அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குருபரன்