ரஜினி அரசியல் பற்றி சுப்ரமண்யசுவாமி அதிரடி

slider அரசியல்
subramanaiyanswamy

 

ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக இன்னும் களம் இறங்குவதற்கு முன்பாகவே அவர் குறித்து பல்வேறு தகவல்கள் நாளும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் அவர் ஒருவேளை அரசியலுக்குள் வந்தால் பா.ஜ.க.வை ஆதரிப்பார் என்கிற கருத்தே பெரும்பான்மையாக இருந்து வருகிறது. இதற்கு அவர் சில நேரங்களில் மத்திய பா.ஜ.க. அரசு எடுத்துவரும் திட்டங்களை ஆதரிப்பதும் ஒரு காரணமாகி விடுகிறது. இந்நிலையில் பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யும், அதிரடி அரசியல்வாதியுமான சுப்ரமண்ய சுவாமி ரஜினிகாந்த் குறித்து தற்போது விமர்சனம் செய்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான கோவிலில் நேற்று (29.12.2019) சுவாமி தரிசனம் செய்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சுப்ரமண்ய சுவாமி. அப்போது பேசும்போது, “தமிழகத்தில் ரஜினி பா.ஜ.க.வை ஆதரித்து அரசியலில் களம் இறங்கினால், அக்கட்சி மேலும் குட்டிச்சுவராகத்தான் போகும். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது. ஒருவேளை அப்படி வந்தால் தொண்டர்களாக வரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே தலைமைப் பொறுப்புக்கு வர நினைக்கக் கூடாது’’ என்று கூறியுள்ளார்.

சுப்ரண்ய சுவாமி தொடக்கத்திலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதையும். அவரை பா.ஜ.க. வரவேற்பதையும் கண்டித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2014 –ம் ஆண்டில் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த்திலிருந்ததே ரஜினியை பா.ஜ.க.வுக்குள் கொண்டுவரும் போக்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது என்று சொல்லலாம். தமிழகத்தில் காலூன்ற ரஜினியின் சினிமா செல்வாக்கு பெரிதும் பயன்படும் என்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைமை கணக்கு போடுவதும் இதன்மூலம் தெளிவாகிறது. இப்படியொரு போக்கு கட்சியால் முன்னெடுக்கும்போது அந்தக் கட்சியின் சீனியர் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் சுப்ரமண்ய சுவாமியின் பேச்சில் ரஜினி குறித்து இவ்வளவு கடுமையான விமர்சனம் வெளியாகியுள்ளது. இது பா.ஜ.க.வின் ரஜினிக்கான செயல் திட்டத்தில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனாலும், ரஜினிக்கு எதிராக பா.ஜ.க.விலும் வலுவான குரல் இருக்கிறது என்பதை சுப்ரமண்ய சுவாமி விமர்சனம் வெளிப்படுத்துகிறது.

  • எம்.டி.ஆர்.ஸ்ரீதர்