களமிறங்கிய அகிலேஷ் யாதவ் – அதிர்ச்சியில் பா.ஜ.க.!

slider அரசியல்

 

akhilesh_yadav-அகிலேஷ் யாதவ்

 

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இருப்பதற்கு உத்தரபிரதேசத்தில் அந்தக் கட்சிக்கு இருக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பலம் மிகவும் முக்கியம். மேலும், அங்கு பா.ஜ.க. ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்ய நாத் முதல்வராக பதவியில் உள்ளார். இங்கே இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த கட்சி சமாஜ்வாதி. முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தார். இப்போதும் அங்கு பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தில் இருப்பதும் சமாஜ்வாதி கட்சி தான். இந்நிலையில், பா.ஜ.க. கொண்டுவர நினைக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை அகிலேஷ் கடுமையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளார். இது பா.ஜ.க. தேசிய தலைமைக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்திரபிரதேச தலைநகர் லக்னோவில் மாணவர் சங்க தலைவர்களிடையே நேற்று (29.12.2019) சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசும்போது, “நாங்கள் இந்தியரா இல்லையா என்பதை பா.ஜ.க. தீர்மானிக்க முடியாது. நாங்கள் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டை (என்.பி.ஆர்) வேண்டாம் என்கிறோம். எங்களுக்கு தேவை வாழ்வாதாரமும் வேலைவாய்ப்பும்தான். நாட்டின் பொருளாதாரம் ஐ.சி.யூவில் இருப்பதாக வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். என்.பி.ஆர் விண்ணப்பங்களை நாங்கள்தான் முதலில் பூர்த்தி செய்யாமல் இருப்போம். நான் எந்த ஒரு விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்யமாட்டேன். இனி நீங்களே என்.பி.ஆர். குறித்து முடிவு செய்யுங்கள். குடியுரிமை சட்ட திருத்தத்தின் போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியாகினர். முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுகள்தான் இத்தனை மரணங்களுக்கு காரணம். தற்போது யோகி ஆதித்யநாத்தைப் போலவே மாநில அரசு அதிகாரிகளும் பேசுகின்றனர். குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களின்போது அதிகாரிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கான சி.சி.டி.வி. காட்சிகள் இருக்கின்றன. நாங்கள் ஆட்சி அமைக்கும் போது விசாரணை நடத்தி இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம். உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்றத்தின் பணியிலுள்ள நீதிபதியைக் கொண்டு குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தவேண்டும்’’ என்று அகிலேஷ் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

இந்தியாவிலே அதிக எம்.பி.க்களைக் கொண்ட மாநிலமாக விளங்கிவருவது உத்தரபிரதேசம். அங்கு 40 எம்.பி.க்களுக்கு மேல் பெற்றால் மட்டுமே பா.ஜ.க.வுக்கு மத்தியில் ஆட்சி என்பது சாத்தியப்படும். ஆகவே, இந்த மாநிலத்தில் தன்னுடைய செல்வாக்கை இழப்பது மத்தியில் ஆட்சியை இழப்பதற்கு வழிவகுக்கும் என்கிற அரசியல் கணக்கை பா.ஜ.க. நினைவில் கொண்டு, சீக்கிரத்தில் அங்கே பெருவாரியான மக்கள் விரும்பும் முடிவுகளை மேற்கொள்ளவில்லையென்றால் அதற்கான எதிர்வினையை நான்கு வருடம் கழித்தும் அனுபவிக்க நேரிடலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • தொ.ரா.ஸ்ரீ.