உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்குகள் – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறைகூவல்!

slider அரசியல்
narendramodi

 

இந்தியாவின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் ஊடகங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மேலும், வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் சூழலும் தற்போது ஏற்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒன்றாக நம் நாட்டில் விளையும் பொருட்களை நாமே வாங்குவது என்பது முக்கியமானது. இந்நிலையில், பிரதமர் மோடி உள்நாட்டு தயாரிப்புகளை பொது மக்கள் வேண்டும் என்று பேசியிருப்பது நாடெங்கும் பெரும் எதிரொலியாகியுள்ளது.

பிரதமர் மோடி  மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த வழக்கமான நிகழ்ச்சியில் நேற்று (29.12.2019) பிரதமர் மோடி பங்கேற்றார்.  இது இந்த ஆண்டின் கடைசி நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “நம் நாட்டு இளைஞர்கள் நமது அரசியல் அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், அது முறையாக இயங்காதபோது ஆவேசமாக கேள்வி கேட்பார்கள். இதை நான் நல்ல விஷயமாக கருதுகிறேன். நமது இளைஞர்கள், அராஜகத்தையும், ஒழுங்கீனத்தையும், ஸ்திரமற்ற தன்மையையும் வெறுக்கிறார்கள். சாதியம், குடும்பத்துக்கு சலுகை காட்டுதல் ஆகியவையும் அவர்களுக்கு பிடிப்பது இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளம் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.

விமான நிலையங்களிலோ, சினிமா தியேட்டர்களிலோ யாராவது வரிசையைத் தாண்டி முன்னே சென்றால், அதை தட்டிக்கேட்பது இளைஞர்கள்தான். அத்துடன், அதை வீடியோ எடுத்து உடனே பரவச் செய்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த கன்னியாகுமரியில் உள்ள கற்பாறைக்கு இளைஞர்கள் செல்ல வேண்டும். அதன்மூலம், ஏழைகளுக்கு பாடுபடும் உணர்வைப் பெற வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்குமாறு எனது சுதந்திர தின உரையில் வேண்டுகோள் விடுத்தேன். அதை மீண்டும் தெரிவிக்கிறேன். நாட்டு மக்கள் அனைவரும் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும். 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அதுவரையாவது, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே வாங்குவோம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.

உள்நாட்டு தயாரிப்புகள், நமது மக்களின் வியர்வை மணம் வீசுபவை. மகாத்மா காந்தி, 100 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய பொருட்களையே வாங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் இயக்கம் தொடங்கினார். அவர் காட்டிய வழியில் நாம் செல்வோம். உள்நாட்டு பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க இளைஞர்கள், சிறு அமைப்புகளை உருவாக்கி மக்களிடையே இதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது. எம்.பி.க்கள் அந்த அளவுக்கு உண்மையாக செயல்பட்டனர். கடந்த 60 ஆண்டுகால சாதனைகளை முறியடித்து விட்டனர். நள்ளிரவுவரை கூட நாடாளுமன்றம் செயல்பட்டது. இதற்காக இரு சபைகளின் தலைவர்களும், அனைத்து எம்.பி.க் களும் பாராட்டுக்கு உரியவர்கள். விண்வெளித் துறையில் இந்தியா நன்றாக முன்னேறி உள்ளது. அளப்பரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

புதிய புத்தாண்டு பிறக்கப் போகிறது. இது புதிய உறுதியையும், சக்தியையும், உற்சாகத்தையும் அளிக்கட்டும். நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. நாட்டு மக்களை புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது. அதற்கு உறுதி எடுத்துக் கொள்வோம்’’ என்று பேசியுள்ளார்.

பா.ஜ.க. என்கிற கட்சியின் முகமாக இல்லாமல் தேசத்தின் முகமாக, பிரதமராக மோடி பேசியிருக்கும் உள்நாட்டு தயாரிப்புகளை நாட்டு மக்கள் வாங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருப்பது அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது. பாராட்டப்பட்டுள்ளது.

 

விசாகன்