தி.மு.க.வில் மீண்டும் வாரிசுப் போட்டி?

slider அரசியல்

 

kanimozhi-கனிமொழி

சமீபத்தில்தான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளோடு இணைந்து சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு பேரணியை நடத்தினார். இந்த பேரணியில் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு தரப்பட்ட முக்கியத்துவம் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி.க்கு அளிக்கப்படவில்லை என்கிற குரல் தி.மு.க.விலே வெளிப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இப்போது கனிமொழி மம்தா பேனர்ஜி போன்ற உடையலங்காரத்திற்கு திடீர் என்று மாறியுள்ளார். இதன் பின்னணியில் தி.மு.க.வுக்குள் வாரிசு போட்டி ஆரம்பமாகிவிட்டதோ என்கிற பேச்சை அரசியல் வட்டாரம் துவங்கியுள்ளது.

சென்னையில் நேற்று (26.12.2019)  குடியுரிமை சட்ட திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை ஆகியவற்றுக்கு எதிராக தொடர் இசை முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பங்கேற்றார். கனிமொழி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டபோது பலரும் அவரை வியந்து பார்த்தனர். ஏனென்றால், அவரின் உடையலங்காரம் பெரிதும் மாறியிருந்தது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி உடையலங்காரத்தை ஒத்திருந்தது கனிமொழியின் உடையலங்காரம் என்றே போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் சொல்லிச் சென்றதையும் பார்க்க முடிந்தது.

இந்தத் தொடர் இசை முழக்கப் போராட்டத்தில் தான் பங்கேற்றதை கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளார். அதில், மூத்த இடதுசாரி தலைவர் நல்லகண்ணுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு படமும், மேடையில் பேசுகிற மற்றொரு படமும் இடம்பெற்றுள்ளன.

கனிமொழியின் இந்த திடீர் உடையலங்காரம் மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியதைவிட தி.மு.க.வின் மூத்த தலைவர்களை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறதாம். முக்கியமாக, திடீரென இன்று மேடையில் அவர் பேசுவது மம்தாவை நினைவூட்டுவதைப் போல இருப்பதும், அவரைப் போன்றே உடையமைப்பும் யதேச்சையான ஒன்றா? அல்லது முடிவெடுத்து செய்ததா? என்பதுதான்  அவர்கள் யோசனைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தி.மு.க. நிர்வாக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘’டெல்லியைப் பொறுத்தவரை தி.மு.க. சார்பில் நடைபெறும் போராட்டங்கள் பெரும்பாலும் கனிமொழியை முன்னிலைப் படுத்தியே நடத்தப்படும். பாராளுமன்றத்திலும் அவருக்கு அதிக முன்னுரிமை தரப்படுகிறது. ஆனாலும்கூட, தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்களில் அண்ணன் ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் தனக்கு முக்கியத்துவம் தரப்படுவதையே கனிமொழி விரும்புவார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்தே மாற்றம் நடக்கத் தொடங்கியது. இதில் அவருக்கு வருத்தம் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இதன் பின்னணியும் மம்தா பானர்ஜி போன்ற பேச்சு, உடை விஷயத்தில் இருக்கலாம்’’ என்றார்கள்.

தி.மு.க.வில் கருணாநிதி இருந்தவரை வாரிசு போட்டி அண்ணன்- தம்பிகளுக்குள் நடைபெற்றது. இப்போது வாரிசு போட்டி அத்தை – மருமகன் என புதிய பரிமாணம் எடுத்துள்ளது என்றே தோன்றுகிறது.

விசாகன்