புதிய அதிபர் பேச்சால் அச்சத்தில் இலங்கைத் தமிழர்கள்!

slider அரசியல் உலகம்

 

கோத்தபய ராஜபக்ஷே

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபருக்கான தேர்தலில் ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே மீண்டும் தமிழர்கள் நிலைமை மோசமாகும் என்றே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கின. அதற்கேற்றார்போல நாளும் கோத்தபய ராஜபக்சேவிடமிருந்து தமிழர்களுக்கு எதிரான பேச்சுக்கள் வரத் தொடங்கியிருக்கிறது. இதனால் மீண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பெரும் கலகம் அரங்கேறுமோ என்கிற விவாதத்தை உலகளவில் தற்போது ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்த போது கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போர் நடைபெற்றது. அப்போது மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், தற்போதைய அதிபருமான கோத்தபய ராஜபக்சே ராணுவ மந்திரியாக இருந்தார். இவர்தான் இறுதிக்கட்ட போரை முன்னின்று நடத்தியவர். அந்தப் போரில் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டில் முன்னாள் இலங்கை அதிபர் மைத்ரியபால சிறிசேனா ஆட்சி காலத்தின்போது ஐ.நா. சபை மனித உரிமை ஆணையத்தில் இலங்கை ராணுவம் மீது போர்க் குற்றம் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இப்போது இந்தத் தீர்மானத்தை அமல்படுத்த முடியாது என  தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் முன்னாள் அதிபர் சிறிசேனாவின் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அதை அமல்படுத்த முடியாது என்றும் மேலும், தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க மாட்டோம். இந்த விவகாரம் நாட்டின் பெரும்பான்மையான மக்களின் ஒப்புதலுடன் மட்டுமே சாத்தியமாகும் என்றும் கோத்தபய திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த அறிவிப்பு இலங்கையில் வாழும் ஈழ தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் பின்னணியில் மீண்டும் தங்களுக்கு எதிராக ஒரு இனக் கலவரம் நடத்தப்படலாம் என்கிற அச்சத்தில் அவர்கள் உள்ளனர் என்றும் இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • தொ.ரா.ஸ்ரீ.