பறிபோகுமா டொனால்ட் டிரம்ப் பதவி?

slider உலகம்
டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் வரலாற்றில் அதிபர் பதவி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டது மற்றும் நிறைவேற்றியது மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 240 ஆண்டுகால அமெரிக்க அதிபர் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளார்.  அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் டிரம்ப் போட்டியிடவுள்ள நிலையில், இந்த பதவி நீக்க தீர்மானம் நிறைவேறியுள்ளதால் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல் உலகளவில் உற்றுநோக்கும் ஒன்றாகவும் ஆகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.  தற்போதைய நிலையில் டிரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவதாக கருத்து கணிப்புகள் கூறிவருகின்றன.

அதிபர் பதவிக்கான போட்டி இப்படி கடுமையான மோதலாக மாறியுள்ள நிலையில், பிரதான போட்டியாளரான ஜோ பிடனுக்கு எதிராக  நாட்டுக்கு எதிராக சதி செய்ததாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்தார் டிரம்ப். அதாவது, அமெரிக்காவுக்கு எதிராக உக்ரைன் நாட்டில் சதித் திட்டம் தீட்டியதாகவும் ஜோபிடன் மீது குற்றச்சாட்டை கூறினார் டிரம்ப். இது அமெரிக்காவில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டார். அரசியலமைப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு டிரம்ப் ஆபத்தை விளைவித்துவிட்டார் என எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறத் தொடங்கின. இது நாளடைவில் வலுவடையத் தொடங்கியது. கடைசியில், இதற்காக டிரம்ப்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கொண்டுவரப்பட்டது. அது இப்போது நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு அமெரிக்காவின் 240 ஆண்டு கால வரலாற்றில் ஏற்கெனவே இரண்டு அதிபர்கள் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1868-ஆம் ஆண்டு தனது அரசியல் எதிரிகளைக் கொல்ல தூண்டியதாக அதிபராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இவர் செனட் சபையில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதுபோல் 1998-ஆம் ஆண்டு அதிபர் பில் கிளிண்டன் மீதும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இவர் வெள்ளை மாளிகை பெண் ஊழியருடன் தவறான உறவு கொண்டிருந்தார் என்கிற புகாரின் பேரில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால். இந்த தீர்மானம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளில் தோற்கடிக்கப்பட்டது.

இவர்கள் வரிசையில் பதவி நீக்க தீர்மானத்தை சந்தித்த மூன்றாவது அமெரிக்க அதிபர் ஆகிறார் டிரம்ப் . இவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் தற்போது பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. அடுத்து செனட் சபையிலும் நிறைவேறினால் மட்டுமே டிரம்ப்பின் பதவி பறிக்கப்படும். ஆனால், செனட் சபையில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு டிரம்ப் மீதான தகுதிநீக்க தீர்மானம் வெற்றி பெற வேண்டுமானால் 66 செனட் உறுப்பினர்கள் தேவை. ஒருவேளை குடியரசு கட்சியிலே டிரம்ப் மீது அதிருப்தி கொண்ட உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பார்களெனில் டிரம்ப் அதிபர் பதவியை இழக்க நேரிடும். மேலும், அடுத்த தேர்தலிலும் போட்டியிடவும் முடியாது. பெரும்பாலும், டிரம்புக்கு ஆதரவாகவே தீர்மானம் நிறைவேறும் என அமெரிக்க ஊடகங்கள் கூறிவருகின்றன.

  • நிமலன்