நடிகர் பரத்துக்கு ரெண்டாவது இன்னிங்ஸ் தந்த ’காளிதாஸ்’!

slider சினிமா
பரத்

நடிகர் பரத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ‘காளிதாஸ்’ படம் கடந்த வாரம் வெளியாகி  வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. புதுமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் சக்ஸஸை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கதாநாயகன் பரத் கலந்து கொண்டார். அப்போது பரத் பேசும்போது, “வெற்றி நாயகன் என்ற வார்த்தையை கேட்டு ரொம்ப நாளாச்சு. நான் சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. எனக்கும் சில படங்கள் தவறி இருக்கிறது. அது எல்லா ஹீரோக்களுக்கும் வரும் தான். ஆனால், என்றாவது ஒருநாள் நமக்கு ஒரு நல்லபடம் அமையும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது.    சினிமா என்பது வணிகம் சார்ந்தது. நிறைய நல்லபடங்கள் நடித்திருந்தாலும் வணிக ரீதியான வெற்றி ரொம்ப முக்கியம்.

இப்படம் 2017- ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சினிமாவில் நிறையபேர் இந்தப்படத்தை பார்த்து விட்டார்கள். நிறையபேர் படம் நல்லாருக்கு. ஆனால், இவர் நடித்து இருக்கிறார். இவருக்கு மார்க்கெட் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள். அது எனக்கு நிறைய மன உளைச்சலைத் தந்தது. ஆனால், இந்தப் படத்தை முதலில் பார்த்த பத்திரிகையாளர்கள் பெரிதாக  கொண்டாடினார்கள். இப்போ ஒரு நல்லபடம் எடுத்தால் மட்டும் போதாது. அதை வாங்கியவர்கள் எப்படி வெளியிட வேண்டும் என்பது மிக முக்கியம். அதை அபிஷேக் சார் சிறப்பாக செய்தார்.

அடுத்த வாரம் ’ஹீரோ’, ’தம்பி’, ’தபாங் – 3’ ஆகிய படங்கள் வெளி வருகிறது. அதோடு நாங்கள் நிற்க வேண்டும். இயக்குநர் ஸ்ரீசெந்தில் மிக நேர்த்தியாக உழைத்து இருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் நின்றுவிட்டார். தமிழ் சினிமாவில் ஒரு தரமான இயக்குநர் லிஸ்டில் அவர் இருப்பார். ரொம்ப வருஷம் கழித்து எனக்கு ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்று பேசினார்.