கர்நாடகா முழுவதும் 144 தடையுத்தரவு! பின்னணி என்ன?

slider அரசியல்

 

எடியூரப்பா

டெல்லி உட்பட நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  கர்நாடகாவிலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று (19.11.2019) இடதுசாரிகள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த தீர்மானித்திருந்தன. இந்நிலையில், கர்நாடகா முழுவதும் 144 தடையுத்தரவு அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  முன்னாள் கர்நாடக முதல்வரும், சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்தராமையா  தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்திய அரசியல் சாசனத்தின் நன்மதிப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து தற்போது மக்கள் ஜனநாயக முறைப்படி போராடும் உரிமையைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பா இப்படி மோடி சொற்படி ஆடுவார் என நான் நினைக்கவில்லை. எடியூரப்பா முற்போக்கானவர் அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் என்றே நான் கருதியிருந்தேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரு டவுன் ஹாலில் இடது சாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-யை கண்டித்து நேற்று பந்த் நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில் எமர்ஜென்சியை தவிர கர்நாடகாவில் அரசியல் கட்சிகளோ அல்லது அமைப்புகளோ ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் பந்த் போன்ற போராட்டங்களை தடுக்க மாநிலம் முழுவதும் 144 தடையுத்தரவை வேறு எந்த அரசும் போட்டதில்லை. இதனை முதல்முறையாக எடியூரப்பா அரசு செய்திருக்கிறது. இதன் பின் விளைவுகள் என்னவாக கூடும் என்பது வரும் தேர்தல்களில் எதிரொலிக்கலாம் என்கிற பேச்சு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்படுவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • தொ.ரா.ஸ்ரீ.