கோத்ரா கலவரத்தில் மோடி நிரபராதி – நானாவதி கமிஷன்!

slider அரசியல்
prime minister modi

கடந்த 2002-ம் ஆண்டு உத்தர பிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்திக்கு செல்வதற்காக கரசேவகர்கள் சபர்மதி ரயில் மூலமாக பயணம் சென்றனர். அவர்கள் பயணம் செய்த அந்த ரெயில் குஜராத் மாநிலம் கோத்ரா அருகே வந்தபோது, அந்த சபர்மதி ரயிலின் குறிப்பிட்ட இரு பெட்டிகளை  ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இந்த கொடூர சம்பவத்தில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, குஜராத் முழுவதும் நடைபெற்ற கலவரத்தில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இது குறித்து விசாரிக்க நானாவதி கமிஷன் அமைத்தார். தற்போது அந்த நானாவதி கமிஷன் அறிக்கை வெளியாகியுள்ளது. தேசிய அளவில் இது எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்போது இந்த கலவரம் இந்தியாவெங்கும் பெரும் அரசியல் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. மேலும், குஜராத் முதல்வராக இருந்த மோடி மீதும், பா.ஜ.க. மீதும் பகிரங்க குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. இந்த கலவரம் குறித்து குஜராத் அரசு சார்பில்  விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஜி.டி.நானாவதி தலைமையிலும், முன்னாள் குஜராத் ஐகோர்ட் தலைமை நீதிபதி அக்‌ஷய் குமார் ஒருங்கிணைப்பிலும் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க முதல்வராக இருந்த நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நானாவதி விசாரணையத்தின் காலக்கெடு சிலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக கடந்த 2014-ம் ஆண்டில் அன்றைய குஜராத் முதலமைச்சராக இருந்த ஆனந்தி பென்னிடம் நானாவதி விசாரணை கமிஷன் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளாக இந்த அறிக்கையின் விபரங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் குஜராத் சட்டசபையில் குஜராத் உள்துறை அமைச்சர் பிரதிப்சின்ஹ் ஜடேஜா  இன்று (11.12.2019)  தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில்,   “2002-ம் ஆண்டில் நிகழ்ந்த இந்த கலவரங்கள் மாநில அரசு அல்லது மந்திரிகளின் ஆதரவுடனோ, தூண்டுதலினாலோ, பங்களிப்புடனோ நடந்ததாக நிரூபிப்பதற்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை. எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் போதுமான ஆயுதபலம் இல்லாததாலும் சில இடங்களில் கலவரக்காரர்களை போலீஸாரால் கட்டுப்படுத்த இயலாமல் போனது. அகமதாபாத் நகரில் நிகழ்ந்த கலவரத்தை அடக்குவதற்கு தேவையான ஆர்வத்தையும் சக்தியையும் பயன்படுத்த போலீஸார் தவறி விட்டனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என நானாவதி கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்திலும், இதற்கு வெளியிலும் கோத்ரா கலவரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பிரதமர் மோடி மீதும், பா.ஜ.க. மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை இன்றுவரை கூறிவருகின்றன. இந்நிலையில்தான் தற்போது நானாவதி கமிஷன் அறிக்கை வெளியாகியிருக்கிறது. மேலும், அந்த அறிக்கையில் மோடி மீதும், பா.ஜ.க. மீதும் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்படும் பழி நீக்கப்பட்டிருக்கிறது என்பது வெளியாகியுள்ளது பா.ஜ.க. வட்டாரத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • தொ.ரா.ஸ்ரீ.