கட்சி தாவுகிறார் காங்கிரஸ் முக்கியப் புள்ளி

slider அரசியல்

 

மனோ

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய செல்வாக்கு பெற்ற பிரமுகர் ராயபுரம் மனோ. ஏறக்குறைய 13 வருடங்கள் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர். மூப்பனார் மகன் வாசனுக்கு நெருங்கிய ஆதரவாளராக இருந்தபோதும் அவர் தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது அவருடன் செல்லாமல், காங்கிரஸிலேயே உறுதியாக ஈடுபாட்டுடன் நின்றவர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் ஒருமுறை பதவி வகித்தவர். இப்படிப்பட்டவர் தற்போது காங்கிரஸிலிருந்து வேறு கட்சிக்கு தாவவுள்ளதாக புறப்பட்டுள்ள தகவலால் காங்கிரஸ் முகாம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இது குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டார காங்கிரஸ் முக்கிய பிரமுகரிடம் இதுபற்றிய விபரம் கேட்டோம். அவர் நம்மிடம், ’’சென்னையில் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்த விழா என்றாலும், நிகழ்ச்சி என்றாலும் ராயபுரம் மனோவின் பங்களிப்பு என்பது ரொம்பவே அதிகமாகமிருக்கும். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மாறினாலும் ராயபுரம் மனோவின் வட சென்னை மாவட்ட தலைவராக 13 வருடங்கள் தொடர்ந்து பதவி வகித்து வந்தார் ராயபுரம் மனோ. இவருக்கு காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து எந்த தொந்தரவும் வந்ததில்லை. ஆனால், இதில் மாநில தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதிலிருந்து தொந்தரவு வரத் தொடங்கியது. கடைசியாக, கட்சி விதிகளை காரணம் காட்டி மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதேநேரத்தில், விரைவில் மாநில பொறுப்பு தரப்படும் என்று மனோவுக்கு உறுதி தரப்பட்டது. அதனால் எப்படியும் தமக்கு மாநில பொருளாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து கிடந்தவருக்கு எதுவுமே தரப்படவில்லை. எனினும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த சமயத்தில்தான், திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, புதிய மாநில தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார். ஆனால், இவர் நியமனத்துக்கு பிறகும் மனோவுக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தரப்படவே இல்லை. இதனால்தான் மனோ கடுமையான அதிருப்திக்கு உள்ளானார். மரியாதையும், முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதைவிட, பேசாமல் காங்கிரஸிலிருந்து விலகிடலாம் என்கிற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். எனக்கு தெரிந்தவரை அவர் தி.மு.க.வுக்கு செல்வதற்கு முதல் சாய்ஸ்ஸும், பா.ம.க.வுக்கு செல்வதற்கு இரண்டாவது சாய்ஸ்ஸும் அளிப்பார்‘’ என்று தெரிவித்தார்.

சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களை திரட்டும் சக்தியாக 13 வருடமாக இருந்துவந்த ராயபுரம் மனோவும் வேறு கட்சிக்கு சென்றார் என்றால் அது சென்னை காங்கிரஸுக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தும் ஒன்றாக மாறும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

  • நிமலன்