காணாமல் போன தேசங்கள் – புத்தக விமர்சனம்

இலக்கியம் உலகம்

 

kaanamal_pona_dhesangal

 

ளிந்து போவது, ஒழிந்து போவது, அழிந்து போவது, சிதைந்து போவது, உருமாறிப் போவது, மறைந்து போவது…!

மேற்கண்ட வார்த்தைகளெல்லாம் ஒன்றுக்கொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை போல இருந்தாலும், வெவ்வேறு பொருளைத் தரக்கூடியவை. இந்த எல்லா வார்த்தைகளுக்கும் பொதுவான சொல்தான் காணாமல் போவது.

காணாமல் போனதாகக் கூறப்படும் ஒரு பொருள் ஒளிந்து போயிருக்கலாம், ஒழிந்தே போயிருக்கலாம், அழிந்தும், சிதைந்தும், உருமாறியும், மறைந்தும் போயிருக்கலாம். மொத்தத்தில் அது இப்போது காணவில்லை.

அமேசான் கிண்டில் பிரசுரம் மூலமாக வெளிவந்திருக்கும் நிர்மல் அவர்களுடைய படைப்பின் தலைப்பு ‘காணாமல் போன தேசங்கள்’. இந்தப் புத்தகத்திற்கு ‘காணாமல்’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல், முதல் பத்தியில் கூறப்பட்டிருக்கும் மற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால், அத்தனை எடுபட்டிருக்காது. ‘காணாமல்’ என்பதே அனைத்தையும் உள்ளடக்கிய பொருத்தமான பொதுச் சொல் மற்றும் வசீகரிக்கும் சொல். எனவே, ‘காணாமல் போன தேசங்கள்’ என்பதே சரி.

ஒரு பொருள் காணாமல் போகலாம். ஒரு தேசம் காணாமல் போக முடியுமா? காணாமல் போன ஒரு பொருளைத் தேடிக் கண்டெடுத்து மீண்டும் அதை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும். ஆனால், காணாமல் போன ஒரு தேசத்தை மீண்டும் கண்டுபிடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியுமா? இப்படியாக, இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் பல கேள்விகள்!

ஒரு தேசம் காணாமல் போனால், அது எங்கும் மறையவில்லை, அழியவில்லை, ஒளியவில்லை, ஒழியவில்லை. மாறாக சிதைந்து, உருமாறியிருக்கிறது. ஆகவே, உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய்விட்டது. அந்த தேசம் இப்போது வேறு பெயரில் அழைக்கப்படுவதால், அதன் முந்தைய பெயர் காணாமல் போய்விட்டது.

தேசங்கள் காணாமல் போக என்ன காரணம், யார் காரணம்? இதைத்தான் தனது புத்தகத்தில், அவருக்கேற்ற மொழி நடையில் விளக்குகிறார் நிர்மல்.

காணாமல் போன தேசங்கள் என யூகோஸ்லாவாகியா, சோமாலியா, கொசாவா, செக்கோஸ்லோவாகியா, கிழக்கு ஜெர்மனி, சோவியத் யூனியன், எஸ்தானியா, போட்ஸ்வானா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளைக் குறிப்பிடுகிறார் நிர்மல். இவற்றில் போட்ஸ்வானா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளும் தலைப்போடு ஒன்றிப்போக மறுக்கின்றன. ஏனென்றால், அந்த தேசங்களும் காணாமல் போயிருக்கக்கூடும். ஆனால், அந் நாட்டு மக்களின் ஒன்றுபட்ட தேச உணர்வால், அவை காணாமல் போன நாடுகளின் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதையும் கூறியிருக்கிறார்.

1946ம் ஆண்டு உருவான நாடு யூகோஸ்லாவாகியா. 1991ம் ஆண்டு அந் நாடு காணாமல் போய்விட்டது. ஆம், இன்று யூகோஸ்லாவாகியா எனும் நாடு உலக வரைபடத்தில் கிடையாது. என்ன காரணம்? அந்த நாடு இயற்கைப் பேரிடரால் அழிந்து விட்டதா? அணுகுண்டு வீச்சு போன்ற கொடிய நிகழ்வுகளைச் சந்தித்து, உருத்தெரியாமல் போய்விட்டதா? இல்லை, அந்த நாடும், அந் நாட்டின் நிலப்பரப்பும் இன்றும் அப்படியேதான் இருக்கின்றன. ஆனால், உலக வரைபடத்தில் அந்த நாட்டைக் காணவில்லை.

கருத்து ஒற்றுமை இல்லாத வெவ்வேறு இனத்தவரை சட்டத்தாலோ அல்லது வேறு உத்தியாலோ இணைத்து, ஒன்றாக வாழ வைத்தால், சட்டமும், உத்தியும் என்றாவது ஒரு நாள் மாறும்போது, அவர்களுக்குள் சண்டை மூளும். இறுதியில் பிரிந்து போய்விடுவார்கள். யூகோஸ்லாவாகியா நாட்டின் கதை இதுதான்.

இன்று, செர்பியா, குரோஷியா, போஸ்னியா, மாண்டினகீரியா, மெசிடோனியா, ஸ்லோவினியா என்கிற ஆறு நாடுகளை உலகுக்குத் தந்து, உலக வரைபடத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது யூகோஸ்லாவாகியா.

விடுவித்துக் கொள்ளல் பெரும் துயரம். வேதனைகளையும், கொடுந்துன்பங்களையும், அவமானங்களையும் தாங்க மாட்டாமல் ஒரு மனிதன் தற்கொலை செய்து கொண்டு, தன்னை இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொள்ளல் எத்தனை துயரமானதோ, அதைப் போன்ற துயரத்தோடுதான் யூகோஸ்லாவாகியா என்கிற நாடும் உலக வரைபடத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு காணாமல் போய்விட்டது.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற நாடுகளின் வரலாற்று நிகழ்வுகளையும், அந்த நாடுகள் ஏன் காணாமல் போயின என்பது பற்றியும் மிக ஆராய்ந்து, புனைவுகள் ஏதுமில்லாமல் விவரிக்கும் நிர்மல், இந்தப் பட்டியலில் இணையாமல் தங்களை பாதுகாத்துக் கொண்ட நாடுகள் பற்றியும் இறுதியாகச் சொல்லியிருக்கிறார். அந்த நாடுகள்தான் போட்ஸ்வானா மற்றும் சுவிட்சர்லாந்து. ஆம், போட்ஸ்வானா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளும் காணாமல் போயிருக்க வேண்டும். ஆனால், இன்றும் அவை உயிர்ப்புடன் இருக்க என்ன காரணம் என்பதையும் விவரித்திருக்கிறார் நிர்மல்.

திரிபுகள் இல்லாத வரலாறுகள் கிடையாது. வரலாற்று நூல்கள் கிடையாது. ஒரு வரலாற்றுப் புதினத்தை உருவாக்கும் ஆசிரியர், தனது கற்பனைகளையும் கலந்து கட்டி எழுதியிருப்பதே இன்றைய பெரும்பாலான வரலாற்று நூல்களாக நம்மை வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நிர்மல் எழுதியிருக்கும் இந்த நூலில் புனைவுகளோ, கற்பனைகளோ கிஞ்சித்தும் இல்லை என்பதை நன்றாக அறிய முடிகிறது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து போகவும், பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் பிரிந்து போகவும், இலங்கையிலிருந்து ஈழம் பிரியாமல் இருக்கவும் என்ன காரணம் என்பதை, இந்நூல் உள்ளே இருக்கும் பல ஆதாரங்கள் உங்களுக்கு உணர்த்தும்.

சினிமா படத்தின் வெளியீட்டை வணிக ரீதியாக ‘ஏ சென்டர், பி சென்டர், சி சென்டர்’ என பார்வையாளர்களின் தரத்திற்கேற்ப பிரித்து வகைப்படுத்துவார்கள். ஏ சென்டரில் சக்கைப் போடு போடுகிற ஒரு படம் பி சென்டரில் சுமாராகவும், சி சென்டரில் காத்தாடவும் செய்யும். நிர்மல் எழுதியிருக்கும் ‘காணாமல் போன தேசங்கள்’ ஏ சென்டர் வாசகர்களுக்கானது.

நீங்கள் அரசியல் ஆர்வலராக, அரசியல் பேசுபவராக இருப்பின், அமேசான் கிண்டில் பதிப்பில் வெளியாகியிருக்கும் இந்த நூலை அவசியம் வாசிக்கவும். விலை ரூபாய் 59 மட்டுமே.