லாராவின் சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா முறியடிப்பாரா?

slider விளையாட்டு
rohithsharma-ரோகித்சர்மா

 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி பகல் – இரவு டெஸ்ட் போட்டி தொடரில் ஆடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்துள்ளது.  இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 335 ரன்கள் எடுத்திருக்கும்போது, ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இன்னும் கூடுதலாக ஒரு மணி நேரம் டிக்ளேர் செய்யாமல் இருந்திருந்தால் டேவிட் வார்னர் 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம் என்கிற கருத்து இப்போது கிரிக்கெட்டில் பலமாக அடிபடத் தொடங்கியுள்ளது.

இது குறித்து டேவிட் வார்னர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், “லாராவின் சாதனையை முறியடிக்கும் நபர் யார் என்று நான் கூற விரும்பினால், அவர் ரோகித் சர்மாவாகத்தான் இருப்பார்’’ என்று கூறியுள்ளார்.  மேலும், அந்த பேட்டியில் ரோகித் சர்மாவை ஹிட்மேன் என்றும் டேவிட் வார்னர் புகழ்ந்துள்ளார்.

davidwarner-டேவிட்வார்னர்

 

தற்போது நடைபெற்றுவரும் உலக டெஸ்ட் கிரிக்கெட் கோப்பைக்கான தொடரில் இதுவரை இந்தியாவே முன்னிலையில் இருந்து வருகிறது. இதற்கு அடுத்த நிலையில் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஐந்து வருடத்திற்கு முன்புகூட டெஸ்ட் கிரிக்கெட் என்றால் ஆஸ்திரேலியாவுக்கு தான் முதலிடம் என்கிற நிலைமையே இருந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தலைமையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அனேகமாக, உலக டெஸ்ட் கோப்பையையும் இந்தியா தான் கைப்பற்றும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அவ்வப்போது கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

இந்ந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அதிரடி மற்றும் முக்கிய ஆட்டக்காரரான டேவிட் வார்னர், ’’லாராவின் சாதனையை இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர் ரோகித் சர்மா தான் முறியடிக்கக்கூடும்’’ என்று கூறியிருப்பது கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு புது பெருமையாக அமைந்துள்ளது.

 

எஸ்.எஸ்.நந்தன்