பா.ம.க. தலைவர் ராமதாஸ் மீது தி.மு.க. வழக்கு!

slider அரசியல்
stalin-ramadas

தேர்தலில் எதிரெதிராக மோதும் தி.மு.க.வும், பா.ம.க.வும், தேர்தல் களத்துக்கு வெளியே மோதும் விவகாரமாக நாளும் விஸ்வரூபமெடுத்து வருகிறது முரசொலி பஞ்சமி நில விவகாரம். இது பஞ்சமி நிலம் தான் என்றும், இது பஞ்சமி நிலம் இல்லை என்றும் ஆரம்பித்த பிரச்னை இப்போது பா.ம.க. தலைவர் ராமதாஸும், பா.ஜ.க. பிரமுகர் சீனிவாசனும் நீதிமன்றத்தில் படியேறும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு  ’அசுரன்’ திரைப் படத்தை பார்த்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ’பஞ்சமி நிலம் குறித்து ’அசுரன்’ திரைப்படம் பேசியுள்ளது. இந்த திரைப்பட குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்’ என்று தனது டுவிட்டரில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரது கருத்துக்கு எதிர் கருத்தாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ’முரசொலி கட்டிடமே பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதுதான்’ என்று தனது டுவிட்டரில் பதிவிட்டார்.

இதற்கு ஸ்டாலின், முரசொலி பத்திரத்தின் பட்டாவை பதிவிட்டு, ’முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலம் அல்ல’ என்று அடுத்த டுவிட்டரில் பதிலளித்தார். இந்த டுவிட்டர் பதிவுக்கு ராமதாஸ்,  ’முரசொலி கட்டிடத்தின் மூலப்பத்திரத்தை காட்டுமாறு’ தனது அடுத்த டுவிட்டரில் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் ஸ்டாலினுக்கும், ராமதாஸுக்கும் என்று நகர்ந்து கொண்டிருக்கையில், இதனுள்ளே நடுவில் புகுந்த தமிழக பா.ஜ.க. செயலாளர் சீனிவாசன் டெல்லியில் உள்ள தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் முரசொலி நிலம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணையும்  மேற்கொள்ளப்பட்டது.      ஆணையத்தின் விசாரணைக்கு தி.மு.க. சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால், புகார் அளித்த சீனிவாசன் விசாரணைக்கு வரவில்லை. இதன்பின்னர் முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு பரப்பியதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸும், பா.ஜ.க. தேசியச் செயலாளர் சீனிவாசனும் தி.மு.க.விடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார். ஆனால், இவர்கள் இருவரும் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில்,  தற்போது ஆர்.எஸ்.பாரதி, சென்னை எழூம்பூர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மற்றும் சீனிவாசன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு வரும் டிசம்பர் 5 -ம் தேதி விசாரணைக்கு வரும் என்று நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்