தனிநாடு உருவாக்கிய நித்தியானந்தா – இந்தியாவுக்கு புது சிக்கல்!

slider உலகம்

 

நித்தியானந்தா கைலாசம்

நித்தியானந்தா மீது குஜராத்தில் பதிவான வழக்கு சம்பந்தமாக காவல்துறை அவரை தேடி வரும் நிலையில், தென் அமெரிக்காவின் ஈக்வடார் அருகேவுள்ள குட்டித் தீவில் தனது சிஷ்யைகளுடன் நித்தியானந்தா இருப்பதாகவும், அந்தக் குட்டி தீவை தனிநாடாக அறிவித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்திய அரசுக்கு நித்தியானந்தா விவகாரம் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

கர்நாடகாவில் பெங்களூருவை அடுத்த பிடதியில் நித்யானந்தாவின் தியான பீடம் இருக்கிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.  மேலும், வெளிநாடுகளிலும் கிளைகள் உண்டு. ஏற்கனவே நித்தியானந்தா மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமீபத்தில் அகமதாபாத்திலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள்  புறப்பட்டது. இது நித்யானந்தாவுக்கு எதிராக வழக்குகளாக மாறின. இதனால் குஜராத் போலீஸ் இவரை கைது செய்ய தேடத் தொடங்கியது. இதன்பின்னர் இவர் குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வந்து கொண்டிருந்தன. அதில் நித்தியானந்தா வெளி நாட்டுக்கு தப்பி ஓட்டம் என்கிற தகவலும் வந்தது. இப்போது அதிகாரப்பூர்வகாகவே அவர் தென் அமெரிக்காவின் ஈக்வடார்  தீவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அங்கே நித்தியானந்தா தனக்கென தனியாக ஒரு நாட்டை உருவாக்கியதாகவும் அதற்கு நித்யானந்தா கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  நித்தியானந்தாவின் தரப்பிலிருந்து கைலாஷ் என்கிற பெயரில் ஒரு இணையதள அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதில், அந்த நாட்டிற்கான தனிக்கொடி, பாஸ்போர்ட்டையும் முதன்மை மொழியாக ஆங்கிலத்தையும், நித்தியானந்தாவின் கைலாஷ் நாட்டுக்கான சின்னங்களையும் அறிவித்துள்ள அதே நேரத்தில் அரசியல் சாசனம் என தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் கிடைக்கும் ஒரு நூலை இணைப்பாக கொடுத்துள்ளனர். இங்கே குடியேற விரும்புகிறவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றெல்லாம் நித்தியானந்தாவின் அந்த கைலாஷ் இணையதளம் குறிப்பிடுகிறது.

நித்தியானந்தாவின் இந்த கைலாசா என்று சொல்லப்படும் தனிநாட்டை சட்டரீதியாக உலகம் முழுவதும் பிரகடனப்படுத்தும் சட்டப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இப்போது இந்தியாவுக்கு வெளிவிவகார அளவில் பெரும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது.

இப்படி ஒரு பக்கம் நிலைமை மாறிக் கொண்டிருக்கையில் புதியதான வீடியோ ஒன்றும் தற்போது  நித்தியானந்தா தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் நித்தியானந்தா, “நான் ஒரு புறம்போக்கு, பரதேசி. இந்த உலகில் என்னை பயமுறுத்த எவராலும் முடியாது. என்னையும் எனது பீடத்தையும் கடவுளே களம் இறங்கி நேரடியாக காத்து வருகிறார். எனக்கு எதிராக அத்தனை செயல்களும் ஆவணப்படுத்தப் படுகின்றன. சர்வதேச சமூகம் அதை கவனித்துக் கொண்டிருக்கிறது’’ என்று பேசியிருப்பதும் அது சமூக வலைத் தளங்களில் வெளியாகியிருப்பதும் இந்த விவகாரத்தை இன்னும் அதிகபட்ச பரபரப்புக்கு ஆக்கியுள்ளது.

ஏற்கெனவே  இந்தியாவில் தேசிய இனங்கள் ஒடுக்கப்படுவதாக கூறி பஞ்சாப், மணிப்பூர் தீவிரவாதிகள் நாடு கடந்த அரசுகளை உருவாக்கியுள்ளனர். இதனை இந்திய சட்டவிரோதம் என்று சொல்லி தேசத் துரோக வழக்கும் போட்டுள்ளது. இப்போது சமய வழியில் நித்தியானந்தா மூலம் ஏற்பட்டுள்ள தனிநாடு பிரச்னையிலும் தேசத் துரோக வழக்கு பாயுமா? அல்லது வெளி விவகாரத்துறை மூலம் வேறு ஏதேனும் ராஜதந்திர நடவடிக்கையை இந்திய அரசு எடுக்குமா? என்பது இன்னும் சில நாள்களில் தெரியவரும்.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்