கோவாவிலும் பா.ஜ.க.வுக்கு எதிராக அணிதிரட்டும் சிவசேனா!

slider அரசியல்
sanjay-rawat-சஞ்சய்-ராவத்

 

மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி உறவை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி உடனடியாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் அமர்ந்துவிட்டது. மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவெங்கும் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவோம் என்று சிவசேனா தலைவர்கள் கூறினார்கள். அதன் ஒரு கட்டமாக கோவாவில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக கூட்டணியை உருவாக்கும் அதிரடியில் சிவசேனா இறங்கியுள்ளதால் பா.ஜ.க. டெல்லி தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் பா.ஜ.க. 13 இடங்களிலும் வென்றன. ஆனால், பா.ஜ.க., சிறு கட்சிகள், சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது சிறு கட்சியான கோவா பார்வார்ட் கட்சியின் (ஜி.எஃப்.பி.) மூன்று எம்.எல்.ஏக்கள் ஆதரவு பா.ஜ.க.வுக்கு மிக முக்கியமாக இருந்தது. இதனால் பா.ஜ.க. அமைச்சரவையில் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்களுக்கும் இடம் கிடைத்தது.  அந்தக் கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் துணை முதல்வரானார்.

இதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.க.வுக்கு கூண்டோடு தாவினர். இதனால் பா.ஜ.க. சட்டசபையில் பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து கோவா பார்வார்ட் கட்சியின் மூன்று அமைச்சர்களும் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக கட்சி தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

 

பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கையால் ஜி.எஃப்.பி.  அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. இது குறித்து அப்போது ஜி.எஃப்.பி. கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் கூறுகையில், “மனோகர் பாரிக்கருக்காகவே பா.ஜ.க.வை ஆதரித்தோம். அவர் மறைவுக்குப் பின்னரும் பாஜகவை ஆதரித்தது தவறு. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்’’ என்று கூறியிருந்தார். இதற்கு அடுத்ததாக, கோவா மாநில காங்கிரஸ் கட்சியுடனும் ஜி.எஃப்.பி. கூட்டணி சேர விரும்பியது. ஆனால், ஜி.எஃப்.பி.யை பா.ஜ.க.வின் பி டீம் என காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது.

இப்போது  சிவசேனா ஜி.எஃப்.பி. கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ’’மகாராஷ்டிராவைப் போல கோவாவிலும் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜி.எஃப்.பி.யின் மூன்று எம்.எல்.ஏக்களும் தற்போது சிவசேனாவுடன் கூட்டணியில் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா, கோவாவை தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான வலிமையான கூட்டணியை உருவாக்குவோம். இந்த நாட்டில் பா.ஜ.க. அல்லாத ஒரு மெகா கூட்டணியை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம்’’ என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சியை பா.ஜ.க. இழந்ததே தேசிய அளவில் பெரும் சரிவு என்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவை தொடர்ந்து கோவாவிலும் சிவசேனா பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரண்டுள்ளதும், இதைப்போல நாடு முழுவதும் அணி திரள்வோம் என்று கூறியிருப்பதும் டெல்லி பா.ஜ.க. தலைமையை கவலை கொள்ள வைத்திருப்பதாகவும், இதற்கு அரசியல்ரீதியாக மாற்று என்ன என்கிற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் டெல்லி அரசியல் வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

  • தொ.ரா.ஸ்ரீ.