உள்ளாட்சியில் சீட் கேட்டு அ.தி.மு.க. மகளிரணி போர்க்கொடி!

slider அரசியல்

தமிழகத்தில் தற்போது கிராமப்புறங்களுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவும் நடக்குமா? அல்லது நீதிமன்ற வழக்குகளால் நிறுத்தப்படுமா? என்கிற நிலையே தற்போது  இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளுங் கட்சியான அ.தி.மு.க.வில் மகளிரணி தரப்பிலிருந்து பெரும் குமுறல் வெடித்திருக்கிறது. இது அ.தி.மு.க. முகாமில் பெரும் பரபரபரப்பை கிளப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இது முதல்முறையாக இந்த உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது. இதன்படி பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, உள்ளிட்ட அமைப்புகளில் அதிகளவில் பெண்கள் பதவிக்கு வரமுடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த 50 சதவீதஇட ஒதுக்கீடு அமலுக்கு வரப்பட்ட நிலையில்,    அ.தி.மு.க.வில் மகளிரணியில் பெரும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில தினங்களாக  உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட ஏராளமான மகளிரணி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ளனர். ஆனால், மாவட்டச் செயலாளர்களும்,  உள்ளூர் நிர்வாகிகளும் பெண்களுக்கான கோட்டாவில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை போட்டியிட வைக்க முயற்சிப்பதால் மகளிரணியினர் இது தொடர்பான புகாரை தலைமைக்கு அனுப்பிவைத்து தங்கள் குமுறலை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.

இதனிடையே மாவட்டச் செயலாளர்கள் தரப்பை தொடர்பு கொண்ட அ.தி.மு.க இரட்டை தலைமை, மகளிரணியில் தகுதி பெற்ற வேட்பாளர்கள் இருந்தால் புறக்கணிக்காமல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்குமாறும், அனைவரையும் அனுசரித்துச் செல்லுமாறும் சமாதானம் செய்து வைத்திருப்பதாகவும் அ.தி.மு.க. வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்பு  சீட் வழங்கும் விவகாரத்தில் அ.தி.மு.க.வில் மகளிரணியினருக்கும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இடையே கடந்த ஒரு மாத காலமாகவே மோதல் நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் தமிழகத்தில் முதன்முதலாக மகளிர் காவல் பிரிவை முன்னுக்கு கொண்டுவந்தவர். அவர் தான் இப்போதும் இந்த 50 சதவீத இட இதுகீட்டை நிறைவேற்றியுள்ளார். இதேபோலவே கட்சி என்னும் வகையில் மகளிரணியாக பாடுபடுபவர்களுக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு தான் உள்ளாட்சிகளில் அமரும் பொறுப்பு. இதை அவர்கள் தலைமையிடம் குரல் உயர்த்தி கேட்பது நியாயம் தானே என்கிறார்கள் அரசியல் நடுநிலையாளர்கள்.

 

  • தொ.ரா.ஸ்ரீ.