ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் மோதல்!

slider அரசியல்
stalin-palanichamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் தினமும் அறிக்கைகள் மூலமோ, பேச்சுகள் மூலமோ ஒருவரை ஒருவர் விமர்சிப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  சில தினங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “நானும் திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே வருடத்தில்தான் எம்.எல்.ஏ. ஆனோம். இருவரும் அரசியலுக்கு வந்தது ஒரே காலகட்டம்தான். நான் முன்னேறிவிட்டேன். நான் முதல்வராகிவிட்டேன். ஆனால், அவரால் வளர முடியவில்லை’’ என்று கிண்டல் தொனியில் பேசியிருந்தார்.

இதற்கு தற்போது ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “உள்ளாட்சி தேர்தலை நாங்கள் நிறுத்த விரும்பவில்லை. அது எங்களின் விருப்பமும் கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்ய அ.தி.மு.க. முயன்று வருகிறது. அதைத் தடுக்கவே வழக்கு தொடுத்து இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த அ.தி.மு.க.விற்கு பயம். அதனால் அவர்கள் எங்களுக்கு எதிராக தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், தமிழக மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.  நான் இன்னும் முதல்வராகவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி என்னை கிண்டல் செய்கிறார். ஆனால், அவர் எப்படி பதவி வாங்கினார். எப்படி முதல்வரானார் என்று எல்லோருக்கும் தெரியும். எனக்கு அவரைப்போல முதல்வராக தெரியாது. என்னால் அப்படி செய்யவும் முடியாது. நான் மண்புழு போல ஊர்ந்து சென்று முதல்வராக விரும்பவில்லை. அப்படி ஒரு மானங்கெட்ட முதல்வர் பதவி எனக்கு தேவையில்லை. தமிழக மக்கள் எனக்கு முதல்வர் பதவியை கொடுப்பார்’’ என்று மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

தமிழகத்தில் செல்வாக்கு கொண்ட இரண்டு கட்சிகளாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இருக்கிறது. இந்த கட்சிகளின் தலைவர்களும் இப்படி மாறி மாறி ஒருவரையொருவர் பேசுவது என்பது நாகரீகத்தில் பேசுவதாக பாமர மக்களால் புரிந்து கொள்ளப்பட மாட்டாது. ஆகவே, இனியாவது விமர்சனங்களில் மேம்பட்ட வார்த்தைகளை இருவரும் பயன்படுத்துவதே பாமர மக்களால் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கும் என்பதே நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.

  • நிமலன்