ஸ்டாலினுக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர்!

slider அரசியல்
pd-arasakumar-பிடி-அரசகுமார்

தமிழகத்திலும் தேசிய அளவிலும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்க்கும் அரசியல் நிலைப்பாட்டில் தான் தி.மு.க. இருந்து வருகிறது. பா.ஜ.க.வுக்கும் இதே நிலைப்பாடு தான்.  இப்படியொரு நிலைமை இருந்துவரும்போது, தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை புகழ்ந்தும், அடுத்த முதல்வர் ஸ்டாலின் தான் என்றும் பேசியிருப்பது   தமிழக பா.ஜ.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அரசியல் மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும் பேசும்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க.வின் சமூக வலைத்தள குழு தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (1.12.2019) தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் மகள் திருமணம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் பா.ஜ.க.வின் தமிழ் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசும்போது, “ஸ்டாலின் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும். ஆனால், அவர் அப்படியெல்லாம் செய்யவில்லை. அவர் கடைசி வரை ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். ஜனநாயக வழியில் தமிழக முதல்வராக ஸ்டாலின் விரைவில் பொறுப்பேற்பார். தமிழகம் விரைவில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை முதல்வராக பார்க்கும். எம்.ஜி.ஆ.ர் எனக்குப் பிடித்தமான தலைவர். அவருக்கு பெரிய அளவில் ஆதரவு இருந்தது. எம்.ஜி.ஆ.ருக்கு பிறகு நான் மதிக்க கூடிய தலைவர் ஸ்டாலின்தான். அவர் அனைத்துக் கட்சிகளையும் மதித்து நடக்கிறார். மிகவும் நேர்மையாக முடிவுகளை எடுக்கிறார். மக்களின் ஆதரவு அவருக்கு நிறைய இருக்கிறது. அவர் உழைப்பால் உயர்ந்தவர். அவருக்கு முதல்வர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் இருக்கிறது’’ என்று பேசியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு பா.ஜ.க. வட்டாரத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.

பி.டி. அரசகுமாரின் ஸ்டாலின் ஆதரவு பேச்சுக்கு முதல் எதிர்வினையாக தமிழக பா.ஜ.க. பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், “அரசகுமாரின் பழைய தி.மு.க. விசுவாசம் இன்னும் போகவில்லை. இந்துத்துவா மீது சகதி வாரி வீசும் தி.மு.க.வுக்கு சந்தன அபிஷேகம் செய்திருக்கிறார். அரசகுமாரின் பேச்சை எந்தவொரு பா.ஜ.க. தொண்டனும் ஏற்கமாட்டான். மேலும், காலம் தாழ்த்தாமல் அரசகுமாரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க.விலும் தேசிய கட்சிகளில் இருப்பது போன்று பல கோஷ்டிகள் உண்டு. பி.டி.அரசகுமாரை பொறுத்தவரை அவர் தமிழிசை சௌந்தராஜன் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தவரை அவரிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர். இன்னும் சொல்லப் போனால், மாநில துணைத் தலைவர் பதவியே தமிழிசையின் சிபாரிசில் தான் அரசகுமாருக்கு வழங்கப்பட்டது. தமிழிசை சௌந்தராஜன் தெலுங்கானா கவர்னராக ஆனதிலிருந்து கட்சி அளவில் குமாருக்கு மவுசு குறைந்துபோனது. இந்த மாதிரியான சூழல் தொடரும் நிலையில் தான் இப்போது அரசகுமார் இப்படி பேசியுள்ளார்.

ஆனால், பி.டி.அரசகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து, “ஸ்டாலின் பற்றி நான் பேசியது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதை பா.ஜ.க.வின் கருத்தாக பார்க்கக்கூடாது. ஒரு திருமண விழாவில் ஒரு கட்சித் தலைவரை தனிப்பட்ட முறையில் பாராட்டிப் பேசியதை, அரசியல் நோக்கத்துடன் திரித்துக் கூறுவது தவறு” என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

 

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்